சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை ஆஸ்திரேலியா மதிப்பிடுகிறது

சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை ஆஸ்திரேலியா மதிப்பிடுகிறது

1 mins read
c295da17-4e72-440e-85c1-764b748b7a14
டிசம்பர் 19ஆம் தேதி கெர்ன்ஸில் தண்ணீர் புகுந்த வீட்டை தொண்டூழியர்கள் சுத்தப்படுத்துகின்றனர். - கோப்புப் படம்: இபிஏ

சிட்னி: ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் கடந்த வாரம் வீசிய ஜஸ்பர் சூறாவளி, அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் இதுவரை இல்லாத சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனை அதிகாரிகள் மதிப்பிட்டு வருகின்றனர். மற்றொரு நிலவரத்தில் ஆறுகளின் நீர்மட்டம் ஆபத்தான நிலையை எட்டியிருப்பதால் தொலைதூர நகரங்களில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் முயற்சிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.

உலகப் புகழ்பெற்ற கிரேட் பேரியர் ரீஃப் உட்பட பல உல்லாசத் தலங்கள் உள்ள குவீன்ஸ்லாந்து வடக்குப் பகுதிகளை கடந்த வாரம் ஜஸ்பர் சூறாவளி சூறையாடியது. அதன் வேகம் குறைந்தாலும் அது ஏற்படுத்திய கனமழையினால் அவ்வட்டாரம் முழுவதும் உள்ள சாலைகள், வீடுகள், பண்ணைகள் வெள்ளத்தில் மூழ்கியிருக்கின்றன.

மாநில அரசின் மீட்பு நடவடிக்கைகளில் ராணுவமும் இணைந்து கொண்டது. இதனால் நிலவரம் சற்று மேம்பட்டு வருகிறது. இதற்கிடையே வெள்ளத்தில் காணாமல்போன 85 வயது முதியவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

கிரேட் பேரியர் ரீஃபுக்கு வாயிலாக விளங்கும் கேர்ன்ஸ் விமான நிலையத்தில் விமானச் சேவைகள் டிசம்பர் 19ஆம் தேதியிலிருந்து (செவ்வாய்க்கிழமை) தொடங்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

“குவீன்ஸ்லாந்தின் வடக்குப் பகுதிகளில் மீட்பு முயற்சிகளில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறோம்,” என்று ஆஸ்திரேலிய ஒளிபரப்பு நிறுவனத்திடம் பேசிய மத்திய அவசரகால நிர்வாக அமைச்சர் மரே வாட் தெரிவித்தார்.

“பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது. இதற்கு அதிக விலை கொடுத்தாக வேண்டும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்