தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வாழ்நாளில் கண்டிராத மோசமான நிலநடுக்கம்: தப்பியோர் பெருமூச்சு

2 mins read
274e6d82-cc78-4c20-b216-c0dc566bc3b9
நிலநடுக்கம் நிகழ்ந்த தஹேஜியா நகரில் உயிர்பிழைத்தோர் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்தனர். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

தஹேஜியா (சீனா): வடகிழக்கு சீனாவின் கான்சு மாநிலத்தில் நிகழ்ந்த ஆக மோசமான நிலநடுக்கத்தில் குறைந்தது 127 பேர் மாண்டுவிட்டனர். அந்தப் பேரிடரில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இதுபோன்ற ஆகப் பயங்கரமான நிலநடுக்கத்தை தங்களது வாழ்நாளில் கண்டதில்லை என்று கான்சு மாநில மக்கள் தெரிவித்தனர்.

“இங்கு எப்போதும் நிலநடுக்கம் ஏற்பட்டதில்லை. வயதில் மூத்தவர்கூட இதுபோன்ற நிலநடுக்கத்தைக் கண்டதில்லை என்று கூறுகின்றனர்,” என தஹேஜியா நகரப் பெண்மணி ஒருவர் கூறினார்.

பூமி ஆட்டம் கண்டதை உணர்ந்து தாம் பதறி எழுந்ததாகவும் உடனடியாக தமது இரு குழந்தைகளை தூக்கிக்கொண்டு பனிகொட்டும் அந்த இரவில் வெளியே ஓடியதாகவும் அந்த நடுத்தர வயது முஸ்லிம் பெண் ஏஎஃப்பி செய்தியாளரிடம் விவரித்தார். தாம் நடத்தி வந்த கடை நொறுங்கிவிட்டதாக அவர் கூறினார்.

நிலநடுக்கத்தில் கான்சு மாநிலத்தின் தஹேஜியா நகர் உருக்குலைந்தது. ஏராளமான கட்டடங்கள் புதைந்ததோடு அங்கிருந்த பள்ளிவாசலின் மேற்கூரையும் இடிந்துவிட்டது.

மா வென்சாங் என்னும் முதியவர் கூறுகையில், எனக்கு வயது 70. என்னுடைய வாழ்நாளில் இதுபோன்ற மோசமான நிலநடுக்கத்தைக் கண்டதில்லை என்றார். தமது வீட்டுச் சுவர்கள் விரிசலடைந்திருப்பதை அவர் ஏஎஃப்பி செய்தியாளரிடம் காட்டினார்.

மிகவும் ஆபத்தானதாக மாறிவிட்டதால் இந்த வீட்டில் இனியும் என்னால் வசிக்க முடியாது என்றார் அவர்.

நிலநடுக்கம் உலுக்கியபோது தாம் உறக்கத்தில் இருந்ததாகவும் வீடு ஆட்டம் கண்டதை உணர்ந்ததும் எழுந்து வெளியே ஓடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் பூஜ்ய டிகிரி செல்சியசுக்குக் குறைவாக வெப்பநிலை இருந்த வேளையிலும் சிலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாயின.

குறிப்புச் சொற்கள்