டிரம்ப் வென்றால் அமெரிக்காவுக்குப் பேரிழப்பு: அதிபர் பைடன் பிரசாரம்

2 mins read
1eef7cb9-2aa9-4e87-b45d-02ef278c4c28
அமெரிக்காவின் ஏழு மாநிலங்களில் அதிபர் பைடனைக் காட்டிலும் திரு டிரம்புக்கு ஐந்து விழுக்காடு கூடுதல் ஆதரவு இருப்பதாக புளூம்பெர்க் ஆய்வு கடந்த வாரம் தெரிவித்தது. - படம்: ஏஎஃப்பி

மேரிலண்ட் (அமெரிக்கா): அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் வென்றால் அமெரிக்கா அனைத்தையும் இழந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமது கட்சியினரிடம் தெரிவித்து உள்ளார்.

எனவே, டிரம்ப்பைத் தோற்கடிக்க ஜனநாயகக் கட்சியினர் சிலிர்த்தெழ வேண்டும் என்றார் அவர்.

மேரிலண்டின் பெதெஸ்டா நகரில் தேர்தல் பிரசார நிதித் திரட்டு நிகழ்வில் பங்கேற்று அவர் பேசினார்.

“நான் பிரசாரம் செய்த மாநிலங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்போர் நாமே வெல்லவேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். அவர்களைப்போல நான் கருதவில்லை,” என்றார் திரு பைடன்.

“நாம் தோற்றால், எல்லாவற்றையும் இழந்துவிடுவோம். அதேநேரம், நாம் வென்றால் அமெரிக்க ஜனநாயகம் காப்பாற்றப்படும்,” என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் அதிபர் டிரம்ப் தமது எதிரிகளைப் பழிவாங்க அரசாங்கத்தைப் பயன்படுத்தியதாகவும் திரு பைடன் குற்றம் சுமத்தினார்.

“எனவே, மீண்டும் அவர் அதிபராகும் தவறு நடந்துவிடக் கூடாது. ஒருவேளை அவர் வெற்றிபெற்றால் நாட்டை அவர் எங்கு கொண்டு செல்வார் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்,” என்றார்.

அண்மையில் வெளியான எட்டு கருத்துக்கணிப்புகள், இரண்டு விழுக்காட்டுக்கும் ஆறு விழுக்காட்டுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசத்திலேயே தாம் வெற்றி பெறுவதைக் காட்டுவதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஏழு மாநிலங்களில் கடும் போட்டி இருப்பதாகவும் அம்மாநில மக்களிடம், தான் நடத்திய கருத்துக்கணிப்பில் திரு பைடனைக் காட்டிலும் திரு டிரம்ப்புக்கு ஐந்து விழுக்காடு கூடுதல் ஆதரவு இருப்பதாகவும் புளூம்பெர்க் செய்தி நிறுவனம் கடந்த வாரம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்