கியவ்வில் பல வானூர்தித் தாக்குதல்கள்

1 mins read
db00f6c1-2cfa-4f2c-ad6a-e8d399a8fbe3
கியவ்வில் உள்ள அடுக்குமாடி வீட்டுக் கட்டடம் ஒன்றை வானூர்தி தாக்கியது. - படம்: இபிஏ

கியவ்: உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை அதிகாலை ர‌ஷ்யா, உக்ரேனியத் தலைநகர் கியவ்வின் பல இடங்களில் வானூர்தித் தாக்குதல்களை நடத்தியது.

அந்தத் தாக்குதல்களில் குறைந்தது இருவர் காயமடைந்தனர், கட்டடங்கள் சேதமடைந்தன. இது, டிசம்பர் மாதத்தில் ர‌ஷ்யா, கியவ்மீது நடத்திய இத்தகைய ஆறாவது தாக்குதலாகும்.

கியவ்வின் மத்திய, தெற்கு, மேற்குப் பகுதிகள் இந்தத் தாக்குதல்களில் குறிவைக்கப்பட்டதாக உக்ரேனிய ஆகாயப் படை தெரிவித்தது. பாய்ச்சப்பட்ட 28 வானூர்திகளில் 24ஐ உக்ரேனிய ஆகாயப் படையினர் சுட்டு வீழ்த்தியதாகவும் அது குறிப்பிட்டது.

சொலொமியான்ஸ்கி வட்டாரத்தில் இருக்கும் அடுக்குமாடி வீட்டுக் கட்டடத்தை ஒரு வானூர்தி தாக்கியதாக கியவ் நகர மேயர் விட்டாலி கிலிட்‌ஷ்கோ டெலிகிராம் செயலியில் தெரிவித்தார். அதனால் நகரின் மையப் பகுதிக்கு தெற்கே இருக்கும் அக்கட்டடத்தின் மேல் தளங்களில் தீ மூண்டதாகவும் அது விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் சொன்னார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்தனர்.

அச்சம்பவம் மகப்பேற்று மருத்துவமனை ஒன்றுக்கு சில நூறு மீட்டர் தொலைவில் நிகழ்ந்தது.

டார்னிட்ஸ்கி, ஹொலொசிவ்ஸ்கி, மிக்கொலாய்வ் ஆகிய வட்டாரங்களிலும் தாக்குதல்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது. அவற்றில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

குறிப்புச் சொற்கள்