பிணை அனுமதிக்கப்பட்ட இம்ரான் கான் வேட்புமனுத் தாக்கல்

பிணை அனுமதிக்கப்பட்ட இம்ரான் கான் வேட்புமனுத் தாக்கல்

1 mins read
47e4f44f-0345-485a-acf4-28b5424dee9d
71 வயது இம்ரான் கான் 2022 ஏப்ரல் மாதம் பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.  - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

கராச்சி: பாகிஸ்தானில் 2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் பொதுத் தேர்தலுக்கு அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 22) வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக ஜியோ நியூஸ் என்னும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் 2024 பிப்ரவரி 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் தமது சொந்த ஊரில் அமைந்துள்ள மியன்வாலி தொகுதியில் போட்டியிட இம்ரான் கான் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அச்செய்தி கூறியது.

முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமான 71 வயது இம்ரான் கான், 2022 ஏப்ரல் மாதம் பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

அப்போது முதல் அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களில் அவர் ஈடுபட்டு வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் இம்ரான் கான் பொதுமக்கள் பார்வையில் படவில்லை.

2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை பிரதமர் பொறுப்பில் இருந்தபோது அரசாங்க பரிசுப் பொருள்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றத்துக்காக அவருக்கு அந்த சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அண்மையில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இம்ரான் கானுக்குப் பிணை வழங்கியது.

இருப்பினும் அவருக்கு எதிராக ஏராளமான கைது ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கப்படுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்