இந்தியா, இலங்கை ஊழியர்களை கட்டட வேலையில் அமர்த்த இஸ்ரேல் தீவிரம்

இந்தியா, இலங்கை ஊழியர்களை கட்டட வேலையில் அமர்த்த இஸ்ரேல் தீவிரம்

2 mins read
975fd8f5-994f-484c-a1b3-1af78afd0887
கட்டட வேலைகள் நடைபெறாததால் இஸ்ரேல் கட்டுமானத் தளங்களில் மயான அமைதி நிலவுகிறது. - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: இஸ்ரேல் தனது ஊழியர் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய இந்தியா மற்றும் இலங்கை நாட்டினரை நாடி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அக்டோபர் 7ஆம் தேதி முதல் ஹமாஸ் போராளிக் குழுவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே கடும் போர் நீடித்து வருகிறது. அதன் காரணமாக இஸ்ரேலில் வேலை செய்த பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் அந்நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர்.

இஸ்ரேலின் மூன்றாவது பெரிய துறையான கட்டுமானத் துறையில், போர் தொடங்குவதற்கு முன்பு வரை 82,000 பாலஸ்தீனர்கள் வேலை செய்து வந்தனர்.

தற்போது, இவர்கள் மட்டுமின்றி சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த 2,000 ஊழியர்களும் இஸ்ரேலைக் கைவிட்டு சொந்த நாடு திரும்பிவிட்டனர்.

அதன் காரணமாக, இஸ்ரேல் முழுவதும் கட்டட வேலைகள் முழுமையாக நடைபெறாததால் கட்டுமானத் தளங்களில் மயான அமைதி நிலவுகிறது. அது அந்நாட்டின் பொருளியலை கணிசமாகப் பாதித்து வருகிறது.

அத்துடன், ஹமாஸை எதிர்த்துப் போரிட பல்லாயிரக்கணக்கான இளையர்கள் இஸ்ரேலின் ராணுவத்துக்குத் துணையாகச் சென்றுவிட்டதால் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது.

இந்தக் காரணங்களால் இஸ்ரேலின் ஊழியர் பற்றாக்குறை கடுமையாகி உள்ளது.

நாட்டின் ஆகப்பெரிய பொருளியல் துறைகளில் ஒன்றான கட்டுமானத்துறையின் 2022ஆம் ஆண்டுக்கான சந்தை மதிப்பு US$71 பில்லியன் (S$94 பில்லியன்) என இஸ்ரேல் கட்டுமானச் சங்கம் மதிப்பிட்டு உள்ளது.

போருக்கு முன்னர் நடைபெற்ற கட்டுமானப் பணிகளில் 15 விழுக்காடு மட்டுமே தற்போது நடந்து வருகின்றன.

எனவே, அந்தத் துறையை மீட்டெடுக்கும் முயற்சியாக புதிய வெளிநாட்டு ஊழியர்களை உடனடியாக பணியில் அமர்த்த வேண்டிய அவசியம் இஸ்ரேல் அரசாங்கத்துக்கு ஏற்பட்டு உள்ளது.

அதன் ஒரு முயற்சியாக, இஸ்ரேல் கட்டுமானச் சங்கப் பிரதிநிதிகள் ஓரிரு நாள்களில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் சென்று பல்வேறு கட்டுமானப் பணிகளில் வேலை செய்ய ஊழியர்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற உள்ளதாக இந்தியாவில் உள்ள ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தியாளர் தெரிவித்து உள்ளார்.

“நாங்கள் ஏற்கெனவே கடும் நிதி நெருக்கடியில் உள்ளோம். இனியும் காலம் தாழ்த்த இயலாது. எனவே வெகுசீக்கிரத்தில் 10,000 ஊழியர்களை இஸ்ரேலுக்குக் கொண்டு வர இலக்கு கொண்டுள்ளோம்,” என்று சங்கத்தின் துணைத் தலைமை இயக்குநர் ஷாய் பாஸ்னர், டெல் அவிவ் நகரில் இருந்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்