கெந்திங் மலை ஹோட்டலில் ஆடவர் மரணம்; சந்தேக நபர் கைது

கெந்திங் மலை ஹோட்டலில் ஆடவர் மரணம்; சந்தேக நபர் கைது

2 mins read
997d5d88-e648-438a-86cb-1413e0e685c5
கெந்திங் மலை ஹோட்டல் ஒன்றில் கை, கால்கள் கட்டப்பட்ட ஆடவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. - கோப்புப் படம்: இணையம்

கோலாலம்பூர்: வெள்ளிக்கிழமை அன்று கெந்திங் மலையில் உள்ள ஒரு ஹோட்டலில் 51 வயது ஆடவர் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மாண்டு கிடந்தார்.

அதைத் தொடர்ந்து சந்தேக நபர் ஒருவர் கொலை குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாண்ட ஆடவர் ஒரு பாதுகாவல் அதிகாரி என்றும் அவர் கடன் முதலைகளுக்கு வேலை பார்த்து வந்தவர் என்றும் நம்பப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ஆடவர் சீனாவைச் சேர்ந்த 45 வயது ஆடவர் என்றும் அவர் டிசம்பர் 6ஆம் தேதி மலேசியா வந்தார் என்றும் மலேசிய ஊடகங்கள் கூறுகின்றன.

சந்தேக நபர் 50,000 ரிங்கிட்களை சூதாட்டத்தில் இழந்ததாகவும் அதன் பின்னர் கடன் முதலை ஒருவரிடம் பெருந்தொகையைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாததால் சந்தேக நபரைக் கடன் முதலை ஹோட்டல் அறையில் அடைத்து வைத்ததாகவும் அவரை கண்காணிக்க பாதுகாவல் அதிகாரியை நியமித்ததாகவும் ஊடகங்கள் குறிப்பிட்டன.

பாதுகாவல் அதிகாரி சந்தேக நபரிடம் பணம் கேட்டு அடித்ததாகவும் அதன் பின்னர் இருவருக்கும் இடையே சண்டை மூண்டதாகவும் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் சந்தேக நபர் பாதுகாவல் அதிகாரியைக் கொன்றார்.அதன் பின்னர் உதவி கேட்டு மருத்துவ ஊழியர்களை அழைத்துள்ளார். பாதுகாவல் அதிகாரி சம்பவ இடத்திலேயே மாண்டதாக மருத்துவ ஊழியர்கள் தெரிவித்தனர்.

அதன் பின்னர் ஹோட்டலில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக மலேசிய ஊடகங்கள் கூறின.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மேலும் இருவரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்