ஜெனீவா விமான நிலையத்தில் வேலை நிறுத்தம்

1 mins read
52fae65b-b5de-4d3c-9c0b-e3f642f8c447
ஊள்ளூர் நேரப்படி டிசம்பர் 24ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு வேலை நிறுத்தம் தொடங்குமெனத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஏஎஃப்பி

ஜெனீவா: சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகர விமான நிலைய ஊழியர்களில் ஒரு பிரிவினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பயணிகள் விமானத்திற்குள் செல்ல ஏதுவாக பயணப்பைகளைக் கையாளுதல், தகவல் தருதல் உள்ளிட்ட இதர வாடிக்கையாளர் சேவைகளில் ஈடுபடும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

‘டிநேட்டா’ எனும் துபாய் தேசிய விமானப் போக்குவரத்து அமைப்பின் ஊழியர்களான அவர்கள், நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள தொழிலாளர் பிரச்சினைகளால் வேலை நிறுத்தம் செய்வதாக அந்த ஊழியர்களின் சங்கம் தெரிவித்தது.

இதனால் விடுமுறைப் பயணம் மேற்கொள்வோர் தாமதத்தை எதிர்கொள்வர் என்று கருதப்படுகிறது.

ஜெனீவாவின் காயின்டிரின் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 25% விமானப் போக்குவரத்தை ‘டிநேட்டா’ ஊழியர்கள் கையாள்வதாகத் தெரிகிறது.

முன்னதாக வேலை நிறுத்தம், உள்ளூர் நேரப்படி டிசம்பர் 24ஆம் தேதி அதிகாலை 4 மணிக்குத் தொடங்கும் என்று ஊழியர் சங்கம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அதிகமானோர் பயணம் செய்துவரும் நிலையில், காயின்டிரின் விமான நிலையத்தின் வழியாக ஏறக்குறைய 60,000 பேர் பயணம் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஏர்ஃபிரான்ஸ், கேஎல்எம் உள்ளிட்ட அனைத்துலக விமானச் சேவை வழங்கும் பல விமான நிறுவனங்களின் பயணிகளுக்கு ‘டிநேட்டா’ ஊழியர்கள் சேவை வழங்குகின்றனர்.

ஐந்து விழுக்காட்டுச் சம்பள உயர்வு, இரவுநேரப் பணி, ஞாயிற்றுக்கிழமை வேலை ஆகியவற்றுக்குக் கூடுதல் சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்