உக்ரேன் மீதான ரஷ்யத் தாக்குதலுக்கு ஐநா கண்டனம்

உக்ரேன் மீதான ரஷ்யத் தாக்குதலுக்கு ஐநா கண்டனம்

1 mins read
82f82bb4-a8c3-4cd0-9c59-71668cb4d65a
உக்ரேனில் வெள்ளிக்கிழமை ரஷ்யா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 31 பேர் கொல்லப்பட்டனர். 160க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

ஐநா: உக்ரேன் மீது ஏவுகணைகளையும் ஆளில்லா வானூர்திகளையும் பயன்படுத்தித் தாக்குதல் நடத்துவதன் தொடர்பில் ரஷ்யா கடும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

தாக்குதலை அடுத்து, கியவ்வும் அதன் ஆதரவு நாடுகளும் ஐக்கிய நாட்டு நிறுவனப் (ஐநா) பாதுகாப்பு மன்றத்தின் அவசரக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன. வெள்ளிக்கிழமை (டிச. 29) நடைபெற்ற அக்கூட்டத்தில் மாஸ்கோ கண்டனத்துக்குள்ளானது.

உக்ரேனில் வெள்ளிக்கிழமை ரஷ்யா நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 31 பேர் கொல்லப்பட்டனர். 160க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

2022 பிப்ரவரியில் உக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான போர் தொடங்கியதிலிருந்து மாஸ்கோவின் ஆகப் பெரிய ஆகாயத் தாக்குதலாக அது கருதப்படுகிறது.

போலந்து அதன் வான்வெளியில் ரஷ்ய ஏவுகணை ஒன்று காணப்பட்டதாகவும் பின்னர் அது உக்ரேனை நோக்கிச் சென்றதாகவும் கூறியது.

உக்ரேனியர்கள் கடுங்குளிருக்கு இடையே மீண்டும் தங்குமிடம் தேடுவதும், இடிபாடுகளை அகற்றுவதும், மாண்டோரைப் புதைப்பதுமாகத் தங்கள் விடுமுறைக் காலத்தைக் கழிக்க நேர்ந்துள்ளது என்று ஐநா பாதுகாப்பு மன்றத் துணைத் தலைமைச் செயலாளர் காலெட் கியாரி கூறினார்.

மன்ற உறுப்பினர்களான அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன. சீனா அந்தத் தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஆனால் உக்ரேனியப் போருக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று அது வலியுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்