செங்கடலில் ஹுதி தாக்குதல்

அமெரிக்க நடவடிக்கையில் 3 கப்பல்கள் மூழ்கின; ஹுதி போராளிகள் 10 பேர் கொல்லப்பட்டனர்

2 mins read
e24a8531-d008-4169-8ab1-65ac2a5fbd2c
செங்கடலில் பன்னாட்டு நடவடிக்கைகளுக்கு எதிராக ஹுதி போராளிகள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். - படம்: இபிஏ

கெய்ரோ: செங்கடலில் டிசம்பர் 31ஆம் தேதி மெர்ஸ்க் கப்பல் நிறுவனத்தின் கொள்கலக் கப்பல் மீது ஹுதி போராளிகள் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதில் நடவடிக்கை எடுத்த அமெரிக்கா மூன்று கப்பல்களை மூழ்கடித்ததுடன் 10 ஹுதி போராளிகளைக் கொன்றதாக மெர்ஸ்க் நிறுவனமும் ஹுதி போராளிக் குழு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கடல் போர் சிங்கப்பூர் கொடி ஏந்திய மெர்ஸ்க் நிறுவனத்தின் ஹங்சாவ் எனப் பெயர் கொண்ட கப்பலில் ஹுதி போராளிகள் ஏற முயன்றபோது ஞாயிறு ஜிஎம்டி நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு (சிங்கப்பூர் நேரம் முற்பகல் 11.30 மணி) நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மெர்ஸ்க் நிறுவனக் கப்பல் உதவி கேட்டதும் அமெரிக்கப் போர்க் கப்பல்களான யுஎஸ்எஸ் ஐசன்ஹோவர், யுஎஸ்எஸ் கிரேவ்லி ஆகியவற்றின் பாதுகாப்புக் குழு ஹுதி போராளிகளின் தாக்குதலை முறியடித்ததாக அமெரிக்க மத்திய தளபத்தியம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து தாக்குதல் நடந்த அடுத்த 48 மணிநேரத்துக்கு தனது கப்பல்கள் எதுவும் செங்கடலில் பயணம் செய்யாது என்று மெர்ஸ்க் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து பேசிய ஹுதி போராளிகளின் பேச்சாளர், தங்களுடைய எச்சரிக்கை ஒலிக்கு செவிசாய்த்து கப்பல் நிற்காததால் தாக்குதல் மேற்கொண்டதாக கூறியது.

அமெரிக்க கடற்படை நடத்திய தாக்குதலுக்குப் பின் தமது கடல் சிப்பந்திகள் 10 பேர் இறந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம் என்று அந்தப் பேச்சாளர் விளக்கினார்.

ஹமாஸ் போராளி இயக்கம் கடந்த அக்டோபர் மாதம் திடீரென இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி கிட்டத்தட்ட 1,200 பேரைக் கொன்று, சுமார் 240 பிணைக் கைதிகளை பிடித்துவைத்துள்ளது. அதன்பின் இஸ்ரேல் இடைவிடாமல் குண்டுவீசி காஸாவில் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதனால் தற்போதைய கடல் போர் வட்டாரப் போராக மாறக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இஸ்ரேலின் ஆகாய, பீரங்கித் தாக்குதலில் காஸாவில் ஏறத்தாழ 21,800 கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஏமனில் உள்ள ஹுதி போராளிகள் ஹமாஸ் இயக்கத்துக்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக, செங்கடலில் பயணம் செய்யும் கப்பல்களைத் தாக்கி வருகிறது. இதனால், பல பெரிய கப்பல் நிறுவனங்கள், செங்கடலில் பயணம் செய்வதற்கு மாற்றாக, அதிக நீளமானதும் கூடுதல் செலவைத் தருவதுமான ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றிச் செல்கின்றன.

சூயஸ் கால்வாயைப் பயன்படுத்தும் கப்பல்களுக்கு ஐரோப்பிய, ஆசிய கண்டங்களை இணைக்கும் இந்தப் பாதையில் செங்கடல் வழியாகத்தான் பயணம் செய்ய வேண்டும் என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்