பூசான் சென்ற தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவருக்கு கத்திக்குத்து

2 mins read
6e05be91-84d7-4d3a-b8f5-48b38a3a4d35
தென்கொரியாவின் ஜனநாயகக் கட்சித் தலைவர் லீ ஜே-மயுங் பூசான் நகருக்குச் சென்றபோது தாக்கப்பட்டார். - படம்: ராய்ட்டர்ஸ் 

சோல்: தென்கொரியாவின் எதிர்த்தரப்பு ஜனநாயகக் கட்சித் தலைவர் லீ ஜே-மயுங், ஜனவரி 2ஆம் தேதி தெற்குத் துறைமுக நகரமான பூசானுக்குச் சென்றபோது கத்திக்குத்துக்கு ஆளானதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. 

முதலில் பூசான் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் அவருக்கு அவசர சிகிச்சை வழங்கப்பட்டது.

முதற்கட்ட சிகிச்சையின் அடிப்படையில் அவரது உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவ ஊழியர்கள் உறுதிப்படுத்தியதால் திரு லீ ஹெலிகாப்டர் மூலம் சோல் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அப்போது அவர் நினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

திரு லீயின் கழுத்துப் பகுதியில் உள்ள பெரிய நரம்பு ஒன்று பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மருத்துவ ஊழியர்கள் சந்தேகிப்பதாக, ஜன நாயகக் கட்சிப் பேச்சாளர் கூறினார். ரத்தக் கசிவு அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

பூசானில் விமான நிலையம் அமையவிருக்கும் இடத்தைத் திரு லீ பார்வையிட்டபோது தாக்குதல்காரர் அவரைக் கத்தியால் குத்தினார்.

திரு லீயிடம் நினைவுக் கையெழுத்து (ஆட்டோகிராஃப்) கேட்டு அணுகிய தாக்குதல்காரர், திடீரென்று பாய்ந்து லீயின் கழுத்தில் கத்தியால் குத்தியதாகக் கூறப்பட்டது.

தாக்குதல்காரர் 1957ஆம் ஆண்டு பிறந்தவர் என்றும் 18 செ.மீ. நீளமுள்ள கத்தியை அவர் இணையம்வழி வாங்கியதாகவும் பூசான் காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபரின் அடையாளங்களை அவர்கள் வெளியிடவில்லை. தாக்குதலுக்கான நோக்கம் குறித்த விசாரணை தொடர்கிறது.

அந்த ஆடவர்மீது கொலை முயற்சிக் குற்றச்சாட்டு சுமத்தப்படும் என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

தாக்குதல்காரர் உடனடியாகக் கட்டுப்படுத்தப்பட்டு சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியது.

திரு லீ, கண்களை மூடிக்கொண்டு தரையில் படுத்திருப்பதையும் சுற்றியுள்ளவர்கள் அவரது கழுத்தில் கைக்குட்டையை வைத்து அழுத்துவதையும் செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட படங்கள் காட்டுகின்றன.

தென்கொரிய அதிபர் யூன் சுக்-இயோல் இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இது மன்னிக்க முடியாத செயல் என்றும் இத்தகைய வன்முறையை எந்தச் சூழ்நிலையிலும் சகித்துக்கொள்ள இயலாது என்றும் திரு யூன் கூறியதாக தென்கொரிய அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்