தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அன்வார்: நாட்டை மேம்படுத்துவதில்தான் கவனம் உள்ளது

2 mins read
cf5e5a23-b3c3-4f67-8f82-4faf469acf6d
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமுடன் அந்நாட்டுத் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடி (வலது). - படம்: பெர்னாமா

புத்ராஜெயா: தமது ஆட்சியைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டப்படுவது குறித்து செய்திகள் வெளியாகியிருப்பது தமக்குத் தெரியும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அது பற்றி கவலைப்படவில்லை என்றும் நாட்டையும் நாட்டு மக்களையும் மேம்படுத்துவதில்தான் தமது முழு கவனம் உள்ளது என்றும் மத்திய தரவுத்தள மையத்தை ஜனவரி மாதம் 2ஆம் தேதியன்று திறந்துவைத்த பிறகு, செய்தியாளர்களிடம் திரு அன்வார் கூறினார்.

ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கு எதிர்க்கட்சியான பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர்களும் ஆளும் கட்சிக் கூட்டணியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் விடுமுறைக்காகச் சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் திரு அன்வார் தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்க்க சதித்திட்டம் தீட்டுவதாக மலேசியாவின் சமூகத் தொடர்புத்துறை துணைத் தலைமை இயக்குநர் இஸ்மாயில் யூசோப், டிசம்பர் 30ஆம் தேதியன்று தெரிவித்திருந்தார்.

எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்க தயாராக இருக்கும் ஆளும் கட்சிக் கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாக திரு இஸ்மாயில் கூறினார்.

இதற்கிடையே, திரு அன்வார் தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது உண்மை என்று மலேசியத் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தச் சதித்திட்டம் தோல்வியில்தான் முடியும் என்றும் சதிகாரர்களின் நேரம்தான் வீணாகும் என்றும் அவர் கூறினார்.

“ஆட்சியைக் கைப்பற்றி புதிய அரசாங்கத்தை அமைக்க அவர்கள் எண்ணம் கொண்டிருந்தால் அடுத்த பொதுத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும்,” என்று தேசிய பேரிடர் நிர்வாக கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் டாக்டர் ஸாஹிட் தெரிவித்தார்.

கூட்டரசு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்த மலேசியர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்