அன்வார்: யாராக இருந்தாலும் சரி, ஊழலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்

அன்வார்: யாராக இருந்தாலும் சரி, ஊழலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்

படம்: ஏஎஃப்பி

02 Jan 2024 - 7:44 pm

2 mins read

புத்ராஜெயா: ஊழலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“நாட்டுக்குச் சொந்தமான பணத்தை, செல்வத்தைக் கையாடுபவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர், நிதி அமைச்சர், அமைச்சர்கள் ஆகியோரும் இதற்கு விதிவிலக்கல்ல. நாட்டைக் காப்பாற்ற இவ்வாறு செய்தே ஆக வேண்டும்,” என்று மத்திய தரவுத்தள நிலையத்தை ஜனவரி 2ஆம் தேதி திறந்துவைத்த பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தார் திரு அன்வார்.

பதவி, அந்தஸ்து ஆகியவற்றைப் பாராமல் ஊழல் புரிபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை திரு அன்வார் பாராட்டினார்.

“ஊழலில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் மலேசியா முனைப்பு காட்டியுள்ளது. பெரும்பாலான நாடுகளில், குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் இவ்வாறு ஒரு நிலை ஏற்படுவது மிகவும் அரிது.

“தலைவர்களுக்கு எதிராக எவ்வித விசாரணையையும் நடத்த முடியாது, நடவடிக்கை எடுக்க முடியாது என்று கருதப்பட்டது. ஆனால் அது உண்மையல்ல என்பதை காட்டிவிட்டோம்,” என்றார் திரு அன்வார்.

மலேசியாவின் முன்னாள் நிதி அமைச்சர் டயிம் ஸைனுதீனுக்கு எதிராக, பதவியைத் தவறான முறையில் பயன்படுத்தியது, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியது ஆகிய குற்றங்களின் பேரில் விசாரணை நடத்தப்படுவதாக ஊழல் தடுப்பு ஆணையம் டிசம்பர் 30ஆம் தேதியன்று தெரிவித்தது.

திரு டயிம், மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மதுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விசாரணை தொடர்பாக தலைநகர் கோலாலம்பூரில் உள்ள 60 மாடி இல்ஹம் டவர் கட்டடத்தை ஆணையம் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளது.

தாம் எவ்வித தவறும் செய்யவில்லை என்று 85 வயது திரு டயிம் டிசம்பர் 28ஆம் தேதியன்று அறிக்கை வெளியிட்டார்.

இதற்கிடையே, போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த மலேசியக் காவல்துறையைத் திரு அன்வார் பாராட்டினார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியா