தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜப்பான் நிலநடுக்கம்: மரண எண்ணிக்கை அதிகரிப்பு

2 mins read
ad8a1249-dbc2-4ea4-b946-76d9b8009e15
இ‌ஷிகாவா மாநிலத்தின் சில இடங்களில் சாலைகள் மோசமாக சேதமடைந்துள்ளதால் கட்டடங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்பதில் சிக்கல்கள் நிலவுகின்றன. - படம்: ஏஎஃப்பி

தோக்கியோ: புத்தாண்டு தினத்தில் ஜப்பானை கடுமையான நிலநடுக்கங்கள் உலுக்கின. அதில் பல கட்டடங்களும் சாலைகளும் மோசமாக சேதமடைந்தன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அன்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்றன.

கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை உயிருடன் மீட்க அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றினர். அதேநேரம் மரண எண்ணிக்கை குறைந்தது 48ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இ‌ஷிகாவா மாநிலத்தில் உள்ள நோட்டோ தீபகற்பத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள், தீயணைப்புப் படையினர், காவல்துறை அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சாலைகள் மோசமாக சேதமடைந்துள்ளதால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கட்டடங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்பதில் சிக்கல்கள் நிலவுகின்றன. மேலும் 10,000க்கும் அதிகமான வீடுகள் மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாக ஜப்பானிய ஊடகங்கள் தெரிவித்தன.

நோட்டோ விமான நிலையத்தின் ஓடுபாதை சேதமடைந்ததால் விமான நிலையம் முடங்கியது. அதனால் 500க்கும் மேற்பட்ட பயணிகள் கார் நிறுத்துமிடத்தில் தவித்து வருகின்றனர். மேலும் ரயில், படகு சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன

“மீட்புப் பணியில் உள்ளவர்கள் நேரத்திற்கு எதிராக போராடி வருகிறார்கள், சாலைகள் உடைந்துள்ளதால் அதிகாரிகளால் நோட்டோவின் வடக்கு பகுதிகளுக்கு செல்ல முடியவில்லை. சுற்றுக்காவலில் உள்ள ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டபோது பல இடங்களில் தீ பரவி உள்ளது. கட்டடங்கள் தரைமட்டமாகி உள்ளன,” என்று ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கி‌ஷிடா தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்கள் சில நகரங்களில் தீயை அணைத்து பல மக்களை மீட்டுள்ளனர் என்றும் ஜப்பானின் தீ மற்றும் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்தது.

நிலநடுக்கம் காரணமாக ஜனவரி 1ஆம் தேதி 100,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏதும் பதிவாகாததால் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். மேலும் சுனாமி எச்சரிக்கை மீட்டுக்கொள்ளப்பட்டது.

நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு ஜப்பானிய அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்