தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘பிழைத்தது அதிசயம்’: விமான மோதலில் உயிர்தப்பியவர்கள் அதிர்ச்சி பேட்டி

2 mins read
391665a7-0fd0-4237-8bb2-f214386d83aa
ஹனேதா அனைத்துலக விமான நிலையத்தில் ஜப்பானிய கடலோரக் காவல்படை விமானத்துடன் மோதிய பின்னர் தீயில் எரிந்து கருகிய ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம். - படம்: ராய்ட்டர்ஸ்

தோக்கியோ: ஜப்பானில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த விமான மோதல் தொடர்பில் பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஜப்பானின் வடக்கு நகரான சாப்போரோவுக்கும் தோக்கியோவின் ஹனேதா விமான நிலையத்திற்கும் இடையிலான விமான வழித்தடம் மிகவும் சுறுசுறுப்பானது. ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் இந்த வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு 16 விமானச் சேவைகளை நடத்துகிறது.

செவ்வாய்க்கிழமை ஹனேதா விமான நிலையத்தில் ஜப்பானியக் கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான சிறிய விமானம் மீது ஜப்பான் ஏர்லைன்சின் ஜேஎல்516 விமானம் மோதியதில் அந்த சிறிய விமானத்தில் இருந்த ஐந்து பேர் உயிரிழந்தனர்.

அதேவேளை ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த 379 பயணிகளும் விமான ஊழியர்களும் உயிர்தப்பினர்.

இரு விமானங்களும் மோதிய வேகத்தில் தீப்பந்து ஒன்று கிளம்பியதாகவும் அதனைத் தொடர்ந்து தீ பற்றி எரிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

விமானம் கிட்டத்தட்ட தரையிறங்கியதும் மாலை 5.46 மணிக்கு (சிங்கப்பூர் நேரம் மாலை 4.46 மணிக்கு) மோதல் நிகழ்ந்ததாக அந்த ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

விமான ஓடுபாதையில் இவ்வாறு மோதல் நிகழ்வது மிகவும் அரிது என்று விமானப் போக்குவரத்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ள வேளையில், மோதல் நிகழ்ந்தது பற்றி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

மோதலுக்குப் பின்னர் விமானம் நின்ற உடனே பயணிகள் அனைவரும் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டதாகவும் 20 நிமிடங்களுக்குள் அந்தப் பணி முடிவுற்றதாகவும் விமான நிறுவனம் கூறியது.

இதற்கிடையே, உயிர்தப்பிய பயணிகளில் சிலர் நடந்தது பற்றி அதிர்ச்சியுடன் விளக்கினர்.

மோதிய வேகத்தில் விமானத்திற்குள் புகை கிளம்பியதாகவும் பயணிகள் விமானத்திற்குள் அங்குமிங்கும் ஓடியதாகவும் அவர்கள் கூறினர்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பதிவேற்றிய காணொளியில் , “என்னை வெளியே கொண்டு செல்லுங்கள்,” என்று ஒரு மாது கதறுவதும் “விமானக் கதவுகளை ஏன் திறக்கக்கூடாது? ” என்று குழந்தை ஒன்று உரக்கக் கத்துவதும் பதிவாகி இருந்தது.

“நான் உயிரிழந்துவிடுவேன் என்றுதான் நினைத்தேன். பிழைத்தது அதிசயம்,” என்று கூறினார் தோக்கியோ குடியிருப்பாளரான சுபாசா சவாடா, 28.

விமானச் சிப்பந்திகள், பயணிகள் பீதியடைய வேண்டாம் என்றும் தங்களுடன் ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்ளும் காணொளி ஒன்றும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துடன் பகிரப்பட்டது.

பிரெஞ்சு தடயவியல் நிபுணர்கள் ஜப்பான் விரைந்தனர்

இந்நிலையில், விமான மோதல் நிகழ்ந்தது குறித்து ஆராய தடயவியல் நிபுணர்களை பிரான்ஸ் ஜப்பானுக்கு அனுப்புகிறது. ‘ஏர்பஸ்’ விமானத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பிரெஞ்சு அரசாங்க முகவையான பிஏஇ-யின் தடயவியல் நிபுணர்கள் புதன்கிழமை (ஜனவரி 3) தோக்கியோ சென்று சேரவிருப்பதாக பிஏஇ தனது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்