தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானிகளுக்குத் தீயைப் பற்றி முதலில் தெரியவில்லை

1 mins read
ba9102ef-5772-4612-ba93-7f818d312500
எரிந்துபோன ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தின் சிதைவுகள். - படம்: இபிஏ

தோக்கியோ: தீப்பிடித்துக்கொண்ட ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானிகளுக்கு தீ மூண்டது முதலில் தெரியவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது.

வியாழக்கிழமையன்று இந்த புதுத் தகவல் வெளியானது.

ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் இருக்கும் ஹனேதா விமான நிலையத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கடலோரக் காவற்படை விமானம் ஒன்றுடன் மோதியது. விமானத்திலிருந்த 379 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஆனால், மோதப்பட்ட கடலோரக் காவற்படை விமானத்தில் இருந்த அறுவரில் ஐவர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமையன்று நிகழ்ந்தது. ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தரையிறங்கியவுடன் இந்த அசம்பாவிதம் நேர்ந்தது.

விமானப் பணியாளர்கள் தெரியப்படுத்தும் வரை விமானம் தீப்பிடித்துக்கொண்டது அதிலிருந்த விமானிகளுக்குத் தெரியவில்லை என்று ஜப்பானின் என்ஹெச்கே ஊடகம் குறிப்பிட்டது.

அந்த விமானத்தின் தலைமைப் பணியாளர் அவசர நுழைவாயில்களைத் திறந்துவிடுவதற்கு அனுமதி பெற தீ மூண்டதை விமானிகளிடம் தெரியப்படுத்தினார். அதற்குப் பிறகே விமானிகளுக்கு விவரம் தெரிந்ததாக என்ஹெச்கே கூறியது.

அவ்வேளையில் விமானத்தின் உட்புறம் புகைமூட்டமாக இருந்ததுடன் உள்ளே வெப்பநிலை அதிகரித்தது. பயணிகள் சிலர் பதற்றத்துடன் இருந்தது காணொளிகள் சிலவற்றில் தெரிந்தது.

எரிந்துபோன பயணிகள் விமானத்தில் எட்டு அவசர நுழைவாயில்கள் இருந்தன. ஆனால் தீயினால் விமானத்தின் முன் பாகத்திலிருந்த இரண்டிலிருந்து மட்டும் அதிலிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்