ஈரான் தாக்குதல்: ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு

ஈரான் தாக்குதல்: ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு

படம்: ராய்ட்டர்ஸ்

05 Jan 2024 - 12:08 pm

2 mins read

துபாய்: ஈரானில் கிட்டத்தட்ட 100 பேரைப் பலிவாங்கிய இரட்டைத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

கெர்மான் நகரில், அந்நாட்டின் புரட்சிகர ராணுவப் படைத் தளபதி காசிம் சுலைமானியின் நான்காம் ஆண்டு நினைவு நாளில் இச்சம்பவம் நிகழ்ந்தது. காசிம் சுலைமானி, 2020ஆம் ஆண்டில் அமெரிக்க வானூர்தித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

புதன்கிழமையன்று நடந்த நினைவஞ்சலி நிகழ்வில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் கிட்டத்தட்ட 100 பேர் கொல்லப்பட்டனர். அஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்க கல்லறை அருகே கூட்டம் திரண்டபோது இரண்டு ஐஎஸ் உறுப்பினர்கள் தாங்கள் அணிந்திருந்த வெடிகுண்டுகளைச் செயல்படுத்தியதாக அந்த அமைப்பு கூறியது

டெலிகிராம் செயலியில் தங்களுக்குத் தொடர்புடைய கணக்குகளின் வாயிலாக சன்னி முஸ்லிம் போராளிக் குழுவான ஐஎஸ் இதனைத் தெரிவித்தது.

இந்த இரட்டைக் குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு ‘பயங்கரவாதிகள்’ காரணம் என்று தெஹ்ரான் முன்னதாகச் சொன்னது. இது, 45 ஆண்டுகளில் ஈரான் சந்தித்துள்ள ஆக மோசமான தாக்குதலாகும். அதற்குப் பழி தீர்க்கப்போவதாக ஈரான் உறுதியளித்தது.

இத்தாக்குதில் மாண்டோரைத் தவிர 284 பேர் காயமுற்றனர். அவர்களில் பெண்களும் சிறுவர்களும் அடங்குவர்.

“சுலைமானியின் ராணுவ வீரர்கள் இதற்கு மிகவும் வலுவான பதிலடியைத் தருவர்,” என்று கெர்மான் நகரில் ஈரானின் முதலாம் துணை அதிபர் முகம்மது மொக்பெர் செய்தியாளர்களிடம் கூறினார்.

முதலில் நிகழ்ந்த குண்டிவெடிப்புக்கு ஒரு தற்கொலைத் தாக்குதல்காரர் காரணம் என்று பெயர் தெரிவிக்கப்படாத ஒருவர் ஈரானின் ஐஆர்என்ஏ ஊடகத்திடம் கூறியிருந்தார். இரண்டாவது குண்டுவெடிப்புக்கும் அதுவே காாரணமாக இருந்திருக்கும் என்றும் அந்நபர் குறிப்பிட்டிருந்தார்.

கெர்மானில் நிகழ்ந்த இரட்டைக் குண்டுவெடிப்புத் தாக்குதலை கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல் என்று வகைப்படுத்திய ஐக்கிய நாட்டு சபையின் பாதுகாப்பு மன்றம், மாண்டோரின் குடும்பத்தாருக்கும் ஈரான் அரசாங்கத்துக்கும் அறிக்கை ஒன்றில் தனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்ட கெர்மான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் திரண்ட மக்கள் ‘இஸ்ரேலுக்கு மரணம்’, ‘அமெரிக்காவுக்கு மரணம்’ என்று உரக்க முழக்கமிட்டனர்.

இரட்டைக் குண்டுவெடிப்பில் மாண்டோருக்கான இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமையன்று நடைபெறும். அன்றைய தினம் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறு ஈரானிய அதிகாரிகள் மக்களைக் கேட்டுக்கொண்டதாக அந்நாட்டு அரசாங்க ஊடகம் கூறியது.

குறிப்புச் சொற்கள்
உலகம்ஈரான்தாக்குதல்ஐஎஸ்ஐஎஸ்