ஜப்பானில் மீண்டும் விபத்துக்குள்ளான கடலோரக் காவற்படை விமானம்

1 mins read
76dde357-2e7e-4891-b068-78d084ae4c66
ஜனவரி 4ஆம் தேதி சேதமடைந்த விமானத்தைச் சோதனையிடும் ஜப்பானியக் கடலோரக் காவற்படையினர். - படம்: த ஜப்பான் நியூஸ்/ஏஷியா நியூஸ் நெட்வொர்க்

தோக்கியோ: ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவின் ஹனேதா விமான நிலையத்தில், ஜனவரி 4ஆம் தேதி, கடலோரக் காவற்படை விமானம் ஒன்று மீண்டும் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே விமான நிலையத்தில் கடலோரக் காவற்படையின் மற்றொரு விமானமும் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானமும் மோதி விபத்துக்குள்ளான இரண்டு நாள்களில் மீண்டும் விபத்து நடந்தது குறிப்பிடத்தக்கது. முந்தைய விபத்தில் கடலோரக் காவற்படை விமானத்தில் இருந்த ஐவர் உயிரிழந்தனர்.

ஜனவரி 4ஆம் தேதி, ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தரைப்பணிகளுக்கான வாகனம், கடலோரக் காவற்படை விமானத்தின்மேல் மோதியது. அந்த விமானத்தில் யாரும் இல்லை என்றும் சம்பவத்தில் யாருக்கும் காயமேற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

உள்ளூர் நேரப்படி மாலை 6மணியளவில், அனைத்துலக விமான முனையத்திற்கும் ஓடுபாதை ‘பி’க்கும் இடையில் அமைந்துள்ள விமான நிறுத்துமிடத்தில் இச்சம்பவம் நடந்தது.

ஜப்பான் ஏர்லைன்சின் சரக்கு ஏற்றும் வாகனம், கடலோரக் காவற்படை விமானத்தின்மேல் மோதியதில் விமானத்தின் இறக்கைகளில் ஒன்றில் விரிசல் ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

அந்த விமானம் மிகத் துல்லியமான ரேடார் கண்காணிப்புக் கட்டமைப்புடன் ஜப்பானிலிருந்து அமெரிக்கா வரை செல்லக்கூடிய நெடுந்தொலைவுப் பயணத் திறன் கொண்டது.

அண்மை விபத்து குறித்து, ஜப்பானின் நிலம், உள்கட்டமைப்பு, போக்குவரத்து, சுற்றுப்பயண அமைச்சும் இதர அமைப்புகளும் விசாரித்து வருகின்றன. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிக்குள் நிகழ்ந்த விபத்து எனும் கோணத்தில் இச்சம்பவம் குறித்து விசாரிக்கப்படுவதாக அமைச்சு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்