தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூத்த ஹிஸ்புல்லா தளபதியை இஸ்ரேல் கொன்றது

2 mins read
cc7c8e5c-2d9a-49c3-bacd-2df915ed6a1d
லெபனானிலிருந்து இஸ்ரேலியப் படைகளைக் குறிவைத்துத் தாக்கும் ஹிஸ்புல்லா படைகளின் தளபதி விசாம் தாவில் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஏஎஃப்பி

பெய்ரூட்: லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மூன்று மாதங்களாக தாக்குதல்கள் நீடித்து வருகின்றன.

இந்நிலையில், ஜனவரி 8ஆம் தேதி தெற்கு லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் அதன் தளபதி விசாம் தாவில் கொல்லப்பட்டதாக அந்த இயக்கம் அறிவித்துள்ளது.

ஹிஸ்புல்லா இயக்கத்தின் உயர் படைப் பிரிவான ராட்வான் என்ற போர்ப் பிரிவின் தலைவரான விசாம் தாவில், இதுவரை கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா படைத் தளபதிகளில் ஆக மூத்தவராக கருதப்படுகிறார்.

இஸ்ரேலுக்கு எதிராக தெற்கு லெபனானில் உள்ள படைகளை அவர் வழிநடத்தி வந்தார் என்று கூறப்படுகிறது.

ஹமாஸ் இயக்கத்துடன் நட்புப் பாராட்டும் ஹிஸ்புல்லா இயக்கம், அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலை ஹமாஸ் இயக்கம் தாக்கியபோது தெற்கு லெபனானிலிருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா இயக்கத்தைச் சேர்ந்த, ராட்வான் போர்ப் பிரிவினர் உட்பட, இதுவரை 130 போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹிஸ்புல்லா இயக்கத்துக்கும், இஸ்ரேலியப் படைகளுக்கும் இடையே கடந்த 2006ஆம் ஆண்டு நடைபெற்ற போருக்குப் பின் தற்பொழுது நடைபெறும் போரே ஆகக் கடுமையானது என்று கூறப்படுகிறது.

இந்தப் போரில் ஹிஸ்புல்லா இயக்கம் இஸ்ரேல் மீது ஏவுகணைகளையும் மற்ற ஆயுதங்களையும் பயன்படுத்த பதிலுக்கு இஸ்ரேல் ஆகாய, பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

இதில் இரு தரப்பு எல்லைகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி உள்ளனர். அத்துடன், அந்த வட்டாரத்தில் போர் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஹமாஸ் இயக்கத்துக்கு எதிரான போர் ஆண்டு முழுவதும் தொடரும் என்று இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது. இந்நிலையில், போர் மேலும் பரவாமல் இருக்க அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் செவ்வாய்க்கிழமையன்று (ஜனவரி 9) இஸ்ரேலிய தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தச் சென்றுள்ளார்.

குறிப்புச் சொற்கள்