தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் நவாஸ் ஷரிஃப்

2 mins read
390a3fa4-c0b9-4249-9665-08887eeb63a7
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிஃப். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிஃப், அடுத்த வாரம் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கவிருக்கிறார்.

நான்காவது தவணைக்கு தேர்தலில் போட்டியிட நாட்டின் உச்ச நீதிமன்றம் அவருக்கு அனுமதி வழங்கிய சில நாள்களில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி, பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

முன்னதாக, திரு ஷரிஃபின் முக்கியப் போட்டியாளராகக் கருதப்பட்ட மற்றொரு முன்னாள் பிரதமரான இம்ரான் கான், தேர்தலில் போட்டியிடத் தகுதி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதுமுதல் அங்கு நிச்சயமற்ற அரசியல் சூழலுக்கிடையே மந்தமான போட்டி நிலவுவதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், ஜனவரி 15ஆம் தேதி பெரிய அளவிலான பிரசாரத்தைத் தொடங்கவிருப்பதாக திரு ஷரிஃபின் உதவியாளர் ராய்ட்டர்சிடம் தெரிவித்தார்.

பிரசாரம் தொடங்கிய இரண்டு நாள்களுக்குப் பிறகே திரு ஷரிஃப் உரையாற்றுவார் என்று தெரிகிறது.

74 வயதாகும் திரு நவாஸ் ஷரிஃபிற்கு பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு தெரிவிக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். திரு இம்ரான் கானுடன் ராணுவத்திற்கு சுமுகமான உறவு இல்லை என்பதை அவர்கள் சுட்டினர்.

பாகிஸ்தானில் பொதுவாக ராணுவ ஜெனரல்கள்தான் அரசாங்கத்தை அமைப்பது அல்லது கவிழ்ப்பது தொடர்பான முடிவுகளை எடுக்கின்றனர். இந்நிலையில், திரு ஷரிஃப் மீண்டும் பிரதமராவதற்கான வாய்ப்பு அதிகம் என்கின்றனர் கவனிப்பாளர்கள்.

திரு கான் மீண்டும் பதவிக்கு வருவதை ராணுவம் விரும்பவில்லை. எனவே திரு ஷரிஃப் அவருக்குக் கடும் போட்டி தருகிறார் என்பதே ராணுவத்திற்குப் போதுமானது என்பது கவனிப்பாளர்களின் கருத்து.

பாகிஸ்தானிய ராணுவத்தின் பொதுத் தொடர்புப் பிரிவு இதுகுறித்துக் கருத்துரைக்கவில்லை.

ராணுவத்துடனான உறவு குறித்து திரு ஷரிஃபின் கட்சிப் பேச்சாளரும் கருத்துரைக்க மறுத்துவிட்டார்.

குறிப்புச் சொற்கள்