2020க்குப் பிறகு முதல்முறையாக சுற்றுப்பயணிகளை அனுமதிக்கும் வடகொரியா

1 mins read
3e3334b4-1fcd-4a2e-9c1b-4f1c779735ef
நினைவுப்பொருள் விற்கும் கடை ஒன்றில் காணப்பட்ட வடகொரியாவின் சுற்றுப்பயணக் கடப்பிதழ். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: வடகொரியா, கொவிட்-19 பெருந்தொற்றைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் அதன் எல்லைகளை மூடியது.

தற்போது அது மீண்டும் வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளுக்கு அனுமதி வழங்கவிருக்கிறது.

ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு குழுவினர் முதல்முறையாக அவ்வாறு அனுமதிக்கப்படுவர் என்று தெரிகிறது. ரஷ்ய அதிகாரிகளும் மேற்கத்திய நாட்டு சுற்றுப்பயண வழிகாட்டி ஒருவரும் இந்தத் தகவலைப் பதிவிட்டுள்ளனர்.

விளாடிவோஸ்டோக்கைத் தளமாகக் கொண்ட சுற்றுப்பயண நிறுவனம் இந்தச் சுற்றுப்பயணத்திற்கு விளம்பரம் செய்துள்ளது.

வடகொரிய எல்லையில் உள்ள ரஷ்யாவின் பிரிமோர்ஸ்கி கிராய் மாநில ஆளுநர் கடந்த டிசம்பர் மாதம் வடகொரியா சென்றபோது இந்த சுற்றுப்பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக அந்த நிறுவனம் கூறுகிறது.

இந்த நான்கு நாள் சுற்றுப்பயணம், பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

தலைநகர் பியோங்யாங், பனிச்சறுக்கு விளையாடும் இடம் போன்றவை சுற்றுப்பயணிகள் கண்டுகளிக்கும் இடங்களில் அடங்கும்.

கொவிட்-19 கிருமிப் பரவலுக்குமுன் சீனச் சுற்றுப்பயணிகள் பெருமளவில் வடகொரியா சென்றுவந்தனர்.

பியோங்யாங், கிருமிப் பரவல் காலத்தில் ஆகக் கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகளை விதித்தது. இன்னும் வெளிநாட்டினருக்கு அது எல்லைகளை முழுமையாகத் திறக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்