பாகிஸ்தானுக்கு $931 மில்லியன் கடன்

பாகிஸ்தானுக்கு $931 மில்லியன் கடன்

1 mins read
e11681f8-11c8-468b-9b5b-9f7b92b5ea64
ஜூலை 2023ல் - படம்: இபிஏ

கராச்சி: அனைத்துலகப் பண நிதியத்தின் நிர்வாக வாரியம் பாகிஸ்தானுக்கு ஏறக்குறைய 700 மில்லியன் அமெரிக்க டாலர் (S$931 மில்லியன்) நிதியைக் கடனாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

நிதியமும் பாகிஸ்தானின் நிதியமைச்சும் ஜனவரி 11ஆம் தேதி இதைத் தெரிவித்தன.

நிதிச் சிக்கலைத் தீர்ப்பதற்காக பாகிஸ்தான் கோரும் 3 பில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவித் திட்டத்தின்கீழ் இந்தத் தொகை வழங்கப்படும்.

இதன்மூலம் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் மொத்த உதவித் தொகை 1.9 பில்லியன் அமெரிக்க டாலர் என்று கூறப்பட்டது.

பாகிஸ்தானில் இப்போது பராமரிப்பு அரசாங்கம் பொறுப்பில் உள்ளது. கடந்த ஜூலை மாதம் ஒப்புதல் பெற்ற நிதியத்தின் கடனுதவித் திட்டம் அந்நாடு நிதிச்சிக்கலைத் தீர்த்துக்கொள்ள உதவியதாகக் கூறப்பட்டது.

ஆனால், அதற்குமுன் சில பொருளியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.

ஜூலை மாதம் இணக்கம் கண்டதற்கு ஏற்ப பாகிஸ்தான் நடந்துகொள்கிறதா என்று மறுஆய்வு செய்ய நவம்பர் மாதம் நிதியத்தின் குழு பாகிஸ்தான் சென்றிருந்தது.

பாகிஸ்தான், நிதியத்திடம் ஒப்புக்கொண்டபடி, வரிகள் மூலம் 1.34 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியைத் திரட்டியதாகக் கூறப்பட்டது.

நிதியத்தின் ஒப்புதல் குறித்த தகவல் வெளியான பிறகு, ஜனவரி 11ஆம் தேதி பாகிஸ்தானின் அனைத்துலகப் பங்குபத்திரங்களின் மதிப்பு வெகுவாக உயர்ந்தது.

குறிப்புச் சொற்கள்