ஹமாஸ்: இஸ்ரேலின் முடிவைப் பொறுத்தே பிணைக்கைதிகளின் விதி அமையும்

1 mins read
f9344950-d7a0-491a-8f99-9406892843f7
ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் இஸ்‌ரேலியர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று பிணைக்கைதிகளின் உறவினர்கள், நண்பர்கள் பேரணி நடத்தினர். - படம்: இபிஏ

ஜெருசலம்: இஸ்‌ரேலியப் பிணைக்கைதிகள் மூவரைக் காட்டும் காணொளி, ஹமாஸ் அமைப்பால் ஜனவரி 14ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.

ஹமாசுக்கு எதிரான தாக்குதல்களை இஸ்‌ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அந்தக் காணொளியில் வலியுறுத்தப்பட்டது.

அவ்வாறு செய்தால் அந்த மூவரும் விடுவிக்கப்படுவர் என்று அது கூறியது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி ஜனவரி 14ஆம் தேதியுடன் 100 நாள்கள் ஆகிவிட்டன.

அந்த 37 விநாடி காணொளியில் 26 வயது திருவாட்டி நோவா அர்காமணி, 53 வயது திரு யோசி ஷராபி, 39 வயது திரு இத்தே சிவர்ஸ்கி ஆகிய இஸ்‌ரேலியப் பிணைக்கைதிகளைக் காண முடிந்தது.

இஸ்‌ரேலின் முடிவைப் பொறுத்தே இந்த மூவரின் விதி அமையும் என்று ஹமாஸ் கூறியது.

இதற்கிடையே, காஸா மீது இஸ்‌ரேலியப் படைகள் குண்டுமழை பொழிந்ததை அடுத்து, இஸ்‌ரேலியப் பிணைக்கைதிகள் சிலருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக ஹமாஸ் தெரிவித்தது.

இஸ்‌ரேலியத் தாக்குதல்களில் அவர்கள் மாண்டிருக்கக்கூடும் என்று அது தெரிவித்தது.

இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்‌ரேலியப் பிணைக்கைதிகள் கொல்லப்படுவர் என்று போரின் தொடக்கத்தில் ஹமாஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்