அதிபர் தேர்தலுக்குப் பின் நட்பு நாடு ஒன்றை இழந்த தைவான்

அதிபர் தேர்தலுக்குப் பின் நட்பு நாடு ஒன்றை இழந்த தைவான்

1 mins read
6fc45eff-2b3e-461a-aa9e-c04db70efb84
தைவானின் தவ்யுவான் நகர குடியிருப்பாளர்களும் அந்நகர முதியோர் இல்லத்தவர்களும் தைவான் தேசிய தினத்தை ஒட்டி நாட்டுக் கொடியை ஏந்தி கொண்டாடுகின்றனர். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

தைப்பே: தைவானிய அதிபர் தேர்தலை அடுத்து பசிபிக் பெருங்கடலில் தீவுகளைக் கொண்ட நாடான நவுரு, தைவானுடனான தனது அரசதந்திர உறவை துண்டித்துக்கொண்டு சீனாவை அங்கீகரித்துள்ளது.

தைவானில் ஜனவரி 13ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபராக டிபிபி எனப்படும் ஜனநாயக முற்போக்கு கட்சியின் சார்பாக போட்டியிட்ட வில்லியம் லாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நவுரு நாட்டின் இந்த முடிவால் தைவான் அதிபர் தேர்தலுக்குப் பின் அந்நாட்டுடனான நட்புறவை முறித்துக்கொண்ட முதல் நாடாக நவுரு விளங்குகிறது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த நவுரு, தனது நலன்களைக் கருத்தில் கொண்டு சீனாவுடன் அரசதந்திர உறவை மீண்டும் ஏற்படுத்திக்கொள்வதே சிறந்த முடிவு என்று கூறியது.

“இதன்மூலம் நவுரு இனி தைவான் குடியரசை தனிநாடாக அங்கீகரிக்காது. மாறாக அது சீனாவின் பிரிக்க முடியாத ஒரு பகுதி. எனவே இன்றுமுதல் அது தைவானுடனான அரசதந்திர உறவுகளை முறித்துக்கொள்வதுடன் இனி ஒருபோதும் அதனுடன் அதிகாரபூர்வ உறவுகளோ, இரு நாட்டு அதிகாரபூர்வ பரிமாற்றங்களோ இருக்காது,” என்று அந்நாடு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

இது பற்றிக் கருத்துரைத்த தைவானிய வெளியுறவு அமைச்சு தான் விரைவில் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தவுள்ளதாக விளக்கியது.

குறிப்புச் சொற்கள்