தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஈரானியப் புரட்சிப் படை: இஸ்‌ரேலிய உளவுத்துறை நிலையங்களை அழித்தோம்

2 mins read
f0ca1cdb-1ab2-42c9-b973-f552b7a60dc3
ஏவுகணைகளைப் பாய்ச்சி தாக்குதல் நடத்திய ஈரானியப் புரட்சிப் படை. - படம்: ஏஎஃப்பி

பாக்தாத்: ஈராக்கில் உள்ள குர்திஸ்தான் பகுதியில் இஸ்‌ரேலிய உளவுத்துறை செயல்பட்டு வந்ததாகவும் அங்கிருந்த அதன் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஈரானின் புரட்சிப் படை தெரிவித்துள்ளது.

அதே சமயம், சிரியாவில் இருக்கும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராகவும் தாக்குதல் நடத்தியதாக அது கூறியது.

“குர்திஸ்தான் பகுதியில் அமைக்கப்பட்ட இஸ்‌ரேலிய உளவுத்துறை நிலையங்கள் மீது ஏவுகணைகளைப் பாய்ச்சி அவற்றைத் தரைமட்டமாக்கினோம்,” என்று ஈரானியப் புரட்சிப் படை ஜனவரி 15ஆம் தேதியன்று அறிக்கை வெளியிட்டது.

குர்திஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், ஈரானுக்கு எதிராக ஈரானிலிருந்தவாறே செயல்பட்டு வந்தவர்கள் மீதும் தாக்குதல்களை நடத்தியதாக ஈரானியப் புரட்சிப் படை கூறியது.

அவர்களைப் பயங்கரவாதிகள் என ஈரானியப் புரட்சிப் படை வர்ணித்துள்ளது.

தாக்கப்பட்டோரில் ஐஎஸ் பயங்கரவாதிகளும் அடங்குவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானியப் புரட்சிப் படை நடத்திய தாக்குதல்களில் அமெரிக்காவுக்குச் சொந்தமான கட்டடங்களோ நிலையங்களோ பாதிக்கப்படவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, ஈரானியப் புரட்சிப் படை குடியிருப்புப் பகுதியைக் குறிவைத்து நடத்திய தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் மாண்டதாக குர்திய அரசாங்கம் கூறியது. அவர்கள் அனைவரும் அப்பாவி மக்கள் என்று அது தெரிவித்தது.

ஈரானியப் புரட்சிப் படையின் இச்செயல், மாபெரும் குற்றமாகும் என குர்திய அரசாங்கம் சாடியது.

தாக்குதலில் குர்திய செல்வந்தரான பெஷ்ரோ டிஸாயீயும் அவரது குடும்ப உறுப்பினர்களில் பலரும் உயிரிழந்ததாக ஈராக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரானியப் புரட்சிப் படை பாய்ச்சிய ஏவுகணைகளில் ஒன்று அவர்கள் வீட்டிற்குள் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதல்கள் குறித்து இஸ்‌ரேலிய அரசாங்கம் கருத்து தெரிவிக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்