தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அயோவாவை டிரம்ப் கைப்பற்றினார்

1 mins read
2cc48f58-1763-49d4-89d6-33697c54517d
முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரப்பிற்கு வலுவான ஆதரவு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: நியூயார்க் டைம்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க அயோவா மாநிலத்தில் நடத்தப்பட்ட வாக்களிப்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அபார வெற்றி பெற்றுள்ளார்.

இதன்மூலம் குடியரசுக் கட்சியில் டிரம்ப்பிற்கு அதிக செல்வாக்கு இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுக் கட்சியில் அவர் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதை இது காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைப் பிரதிநிதிக்கும் வாய்ப்பை டிரம்ப் நெருங்கியுள்ளார்.

சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் 1 மணி நிலவரப்படி 90 விழுக்காடு வாக்குகள் எண்ணப்பட்டிருந்தன.

அதில் டிரம்பிற்கு 50.9 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன.

21.3 விழுக்காடு வாக்குகளுடன் ஃபுளோரிடா ஆளுநர் ரோன் டிசான்டிஸ் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

முன்னாள் ஐக்கிய நாட்டுத் தூதர் நிக்கி ஹேலி 19 விழுக்காடு வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

டிரம்ப்பிற்குப் பதிலாக குடியரசுக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட திரு டிசான்டிசும் திருவாட்டி ஹேலியும் இலக்கு கொண்டுள்ளனர்.

ஆனால், அயோவா வாக்களிப்புக்கான முடிவுகள் அவர்களுக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்நிலையில், வாக்களிப்பு மையங்களுக்கு அயோவா மக்கள் பெருமளவில் திரண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் வாக்களித்தனர்.

1,600 பள்ளிகள், சமூக நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் வாக்களிப்பு மையங்கள் அமைக்கப்பட்டன.

நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும்போதிலும் டிரம்பிற்கு அயோவா மக்களின் ஆதரவு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அயோவா மக்களுக்குத் தமது நன்றியை டிரம்ப் சமூக ஊடகம் மூலம் தெரிவித்துக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்