எக்குவடோர் சிறையிலிருந்து கைதிகள் பலர் தப்பினர்

1 mins read
1484f114-77db-4316-af21-225fddeec01f
சிறையிலிருந்து தப்பிய கைதிகளைத் தேடிப் பிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. - படம்: ஏஎஃப்பி

குவிட்டோ: எக்குவடோரின் வடக்குப் பகுதியில் உள்ள சிறையிலிருந்து 48 கைதிகள் தப்பி ஓடியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

43 கைதிகள் இன்னும் பிடிபடவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அவர்களைத் தேடிப் பிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

எக்குவடோரில் அவசரநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிறைக் கைதிகள் பலர் தப்பி ஓடியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்தச் சிறை கொலம்பியாவுடனான எல்லைப் பகுதிக்கு அருகில் உள்ளது.

ஜனவரி 14ஆம் தேதியன்று அச்சிறையில் ஏறத்தாழ 2,000 பாதுகாப்புப் படை அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர்.

அப்போது கைதிகள் அங்கிருந்து தப்பினர்.

கைதிகள் தப்பி ஓடியதை அதிரடிச் சோதனை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

தப்பி ஓடிய கைதிகளில் ஐவரை அதிகாரிகள் பிடித்தனர்.

கைதி ஒருவர் சிறையிலேயே மாண்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதுகுறித்து மேல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

எக்குவடோரில் கடந்த வாரம் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.

ஆபத்துமிக்க குற்றவாளி ஒருவர் சிறையிலிருந்து தப்பியோடியதை அடுத்து, நாட்டில் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான ஒளிபரப்பு அறையில் நேரலையின்போது முகமூடி அணிந்த துப்பாக்கிக்காரர்கள் அத்துமீறி நுழைந்தனர்.

பல்வேறு நகரங்களில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்ததுடன் காவல்துறை அதிகாரிகள் சிலர் கடத்தப்பட்டனர்.

இதனால் அவசரநிலை அறிவிக்கப்பட்டதுடன் இரவுநேர ஊரடங்கும் விதிக்கப்பட்டது.

மேலும், 22 சட்டவிரோதக் கும்பல்களை எக்குவடோர் அரசாங்கம் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்த்தது.

குறிப்புச் சொற்கள்