தென்கொரியாவில் தாக்கப்பட்ட சிங்கப்பூர் மாணவி: சந்தேக நபர் கைது

தென்கொரியாவில் தாக்கப்பட்ட சிங்கப்பூர் மாணவி: சந்தேக நபர் கைது

2 mins read
b0f5b96f-93c6-4af0-a3f7-86d9cc3e5fde
தாக்கப்பட்ட சிங்கப்பூர் மாணவியின் முகத்தில் வீக்கம் ஏற்பட்டது. - படம்: இணையம்

சோல்: தென்கொரியாவில் கடந்த வாரம் பட்டப்பகலில் சிங்கப்பூர் மாணவி ஒருவர் தாக்கப்பட்டார்.

அவரைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் தென்கொரிய ஆடவர் ஜனவரி 16ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட ஆடவர் 30 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர் என்று அறியப்படுகிறது.

அவரது பெயரைத் தென்கொரிய காவல்துறை வெளியிடவில்லை.

ஜனவரி 12ஆம் தேதியன்று தென்கொரிய நேரப்படி மாலை 4 மணி அளவில் சிங்கப்பூர் மாணவியின் முகத்தில் அந்த ஆடவர் பலமுறை குத்தியதாக நம்பப்படுகிறது.

குமாரி இங் சாலையைக் கடந்துகொண்டிருந்தபோது தாக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

அவரைத் தாக்கிய ஆடவருக்கு மூளை வளர்ச்சி குறைபாடு இருப்பதாகவும் அவர் பிறருடன் தொடர்புகொள்ள சிரமப்படுபவர் என்றும் காவல்துறை கூறியது.

குமாரி இங்கிற்கு முகத்தில் இலேசான காயங்கள் ஏற்பட்டன. அவரது முகத்தில் வீக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

தாக்கியவரிடமிருந்து தப்பி ஓடிய குமாரி இங், சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் அளித்தார்.

தாக்கியவர் அவரது குடும்ப உறுப்பினர் ஒருவருடன் சாலையைக் கடந்துகொண்டிருந்தபோது அந்த ஆடவர் திடீரென்று தனியாகச் சென்ற தம்மைத் தாக்கியதாக குமாரி இங் தெரிவித்தார்.

இதற்கிடையே, இதுமாதிரியான தாக்குதல்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள குமாரி இங்கிடம் அறிவார்ந்த கைக்கடிகாரம் ஒன்றைத் தென்கொரியக் காவல்துறை வழங்கியுள்ளது.

குமாரி இங்கிற்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அவர் அணிந்திருக்கும் அந்தக் கைக்கடிகாரம் மூலம் அவரது இருப்பிடம் தென்கொரியக் காவல்துறைக்குத் தெரியவரும்.

இந்தச் சம்பவம் குறித்து கூடுதல் விசாரணை நடத்த தென்கொரியக் காவல்துறை திட்டமிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் மாணவி தென்கொரியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பயில்பவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்