ஆட்சிக் கவிழ்ப்பைத் தடுக்கும் புதிய சட்டம் குறித்து பரிசீலனை; எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆட்சிக் கவிழ்ப்பைத் தடுக்கும் புதிய சட்டம் குறித்து பரிசீலனை; எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

2 mins read
b83a44c1-4011-47d1-9af0-27eb4c88247c
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்க்க எதிர்க்கட்சிக் கூட்டணியுடன் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து சதித்திட்டம் தீட்டுவதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பிரதமர் அன்வார் இப்ராகிமின் ஆதரவாளர்கள் அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு அன்வாரின் அரசாங்கம், முழுமையாக ஐந்தாண்டுகளுக்கு ஆட்சி செய்ய ஏதுவாகப் புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துவது குறித்து ஆளும் கூட்டணி பரிசீலித்து வருகிறது.

இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் ஆளும் கட்சியைக் கவிழ்க்க முடியாது என்றும் நிர்ணயிக்கப்பட்ட ஐந்தாண்டுகளுக்கு அது ஆட்சி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இத்தகைய சட்டம் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

திரு அன்வாரின் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் திட்டத்துடன் எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆளும் கட்சியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் அண்மையில் துபாயில் சந்தித்துப் பேசியதாகக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதியன்று மலேசிய அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆட்சிக் கவிழ்ப்பைத் தடுக்க புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்று ஜனவரி 13ஆம் தேதியன்று துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

இதன்மூலம், அடுத்த பொதுத் தேர்தல் வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் என்றார் அவர்.

இந்தப் பரிசீலனை குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று மலேசிய சட்ட அமைச்சர் அசாலினா ஓத்மான் தெரிவித்தார்.

“இதுபோன்ற சட்டம் பல நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அரசியல், பொருளியல் நிலைத்தன்மையை உறுதி செய்ய இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாட்டின் ஜனநாயக முறைக்குப் பங்கம் விளைவிக்கும் ஆட்சிக் கவிழ்ப்புகளைத் தடுக்க இது உதவும்,” என்று திருவாட்டி அசாலினா கூறினார்.

ஆனால் இதை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தக்கியுதீன் ஹசான் ஏற்க மறுத்தார். பெரும்பான்மையை இழக்கும் ஓர் அரசாங்கம் தொடர்ந்து ஆட்சி செய்ய இந்தச் சட்டம் வகை செய்யும் என்றும் அது முறையல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்