வடகொரியா: புட்டின் வருகிறார்

வடகொரியா: புட்டின் வருகிறார்

2 mins read
bbcc4ce2-ccc7-43b8-9e7a-001f9b01860f
ரஷ்யாவில் 2023 செப்டம்பர் 13ஆம் தேதி ரஷ்ய அதிபர் புட்டினும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் நேரடியாகச் சந்தித்தனர். - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் பியோங்யாங்குக்கு வர விரும்புவதாக வடகொரிய வெளியுறவு அமைச்சர் சோ சோன் ஹுய் தெரிவித்துள்ளார்.

வடகொரிய வெளியுறவு அமைச்சை மேற்கோள்காட்டி இந்தத் தகவலை ஜனவரி 21ஆம் தேதி அன்று வடகொரிய அரசாங்க செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ வெளியிட்டது.

கடந்த வாரம் மாஸ்கோவில் அதிபர் புட்டினை சோ சோன் ஹுய் சந்தித்துப் பேசினார்.

அப்போது தமக்கு அழைப்பு விடுத்த வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு புட்டின் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ரஷ்ய அதிபர் ஒருவர் வடகொரியாவுக்குச் செல்வது இருபது ஆண்டுக்கு மேலாக நடக்காத சம்பவமாகும்.

கடந்த ஜனவரி 15ஆம் தேதி பேசிய கிரம்ளின் மாளிகைப் பேச்சாளர், வடகொரியா பயணத்தை திரு புட்டின் எதிர்கொண்டு காத்திருப்பதாகத் தெரிவித்தார்.

இந்தப் பயணம் எப்போது வேண்டுமானாலும் இடம்பெறலாம். ஆனால் தேதி இறுதி செய்யப்படவில்லை என்று அந்தப் பேச்சாளர் சொன்னார்.

புட்டின் விரைவில் வடகொரியா வர விரும்புகிறார் என்று கேசிஎன்ஏயின் கொரிய மொழித் தகவல் தெரிவித்தது. ஆனால் அதன் ஆங்கில அறிக்கை, குறிப்பிட்ட தேதியில் அவ்வாறு அவர் செய்ய விரும்புவதாகக் குறிப்பிட்டது.

திருவாட்டி சோயின் ரஷ்யப் பயணத்தின்போது, ​​உக்ரேன் மீதான ராணுவ நடவடிக்கையில் வடகொரியா அளித்த ஆதரவுக்கும் ஒற்றுமைக்கும் ரஷ்யா நன்றி தெரிவித்ததாக கேசிஎன்ஏ மேலும் தெரிவித்தது.

பியோங்யாங்கும் மாஸ்கோவும் வடகொரியாவின் இறையாண்மைக்கு எதிரான அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் ஆத்திரமூட்டும் செயல்கள் குறித்து தீவிர கவலை தெரிவித்துள்ளன. அதே சமயத்தில் வட்டாரச் சவால்களை எதிர்கொள்ள இரண்டு நாடுகளும் இணைந்து செயல்பட ஒப்புக் கொண்டன.

குறிப்புச் சொற்கள்