ஸாஹிட்: இந்திய மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்பத் திறன் பயிற்சிகளில் கூடுதல் வாய்ப்பு

ஸாஹிட்: இந்திய மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்பத் திறன் பயிற்சிகளில் கூடுதல் வாய்ப்பு

2 mins read
691fea6d-34e3-4143-91cb-5df7f9705171
மலேசியத் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடி. - படம்: பெர்னாமா

ஷா அலாம்: மலேசிய இந்திய மாணவர்களுக்கு நாடெங்கும் உயர் தொழில்நுட்பத் திறன், தொழில்சார்ந்த பயிற்சிகளில் சேர்ந்து பயில கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று மலேசியத் துணைப் பிரதமர் அகமது ஸாஹிட் ஹமிடி உறுதி அளித்துள்ளார்.

இதன்மூலம் கல்வி ரீதியாகவும் பொருளியல் ரீதியாகவும் மலேசிய இந்தியர்கள் உயர இது வழிவகுக்கும் என்றார் அவர்.

ஏழ்மையின் கொடிய பிடியிலிருந்து தப்பிக்க கல்விதான் ஆகச் சிறந்த வழி என்று டாக்டர் ஸாஹிட் கூறினார்.

“தேசிய உயர் தொழில்நுட்பத் திறன் மற்றும் தொழில்சார்ந்த பயிற்சிகள் மன்றத்தின் தலைவர் என்கிற முறையில், மலேசிய இந்திய மாணவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி அவர்களுக்குக் கூடுதல் வாய்ப்புகள் வழங்குவேன் என்று மலேசிய இந்திய காங்கிரஸ் (மஇகா) கட்சியின் தலைவர் திரு எஸ்.ஏ விக்னேஸ்வரனிடம் தெரிவித்தேன்,” என்று ஷா ஆலாமில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தெரிவித்தார் டாக்டர் ஸாஹிட்.

தொழில்நுட்ப மேம்பாடுகளில் கவனம் செலுத்தும் பயிற்சிகளில் சேர்ந்துப் பயில மலேசிய இந்திய மாணவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்றார் அவர்.

சாதாரண பயிற்சிகள் மட்டுமின்றி செயற்கை நுண்ணறிவு, மின் வாகனம் போன்ற உயர் தொழில்நுட்பப் பயிற்சிகளில் சேர்ந்த பயில மலேசிய இந்திய மாணவர்களுக்கு இடங்கள் வழங்கப்படும் என்று டாக்டர் ஸாஹிட் கூறினார்.

இத்தகைய பயிற்சியில் தேர்ச்சி பெற்றதும், உயர் தொழில்நுட்பத் துறைகளில் அவர்களால் பணியாற்ற முடியும் என்று அவர் தெரிவித்தார்.

பொங்கல் விழா நிகழ்ச்சியின்போது அரசாங்க பல்கலைக்கழகங்களில் பயிலும் 200க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு டாக்டர் ஸாஹிட் ‘டெப்லட்’ எனப்படும் கையடக்குக் கணினிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மஇகா தலைவர் திரு விக்னேஸ்வரனும் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமியும் இந்திய சமூகத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்