ஹமாஸ் நிபந்தனைகளை ஏற்க மறுத்த நெட்டன்யாகு

ஹமாஸ் நிபந்தனைகளை ஏற்க மறுத்த நெட்டன்யாகு

1 mins read
58c5bc97-d0ad-4a0e-bd45-65dbf531e277
இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு. - படம்: ஏஎஃப்பி

ஜெருசலம்: போரை நிறுத்தவும் பிணைக்கைதிகளை விடுவிக்கவும் ஹமாஸ் அமைப்பு விதித்த நிபந்தனைகளை இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு ஏற்க மறுத்துவிட்டார்.

காஸாவிலிருந்து இஸ்ரேலியப் படைகள் முழுமையாக வெளியேறிவிட வேண்டும் என்றும் காஸாவில் ஹமாஸ் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்றும் ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், காஸாவின் தென்பகுதியில் உள்ள கான் யூனிஸ் ‘நகர் மீது இஸ்‌ரேலியப் போர் விமானங்கள் தொடர்ந்து குண்டுமழை பொழிந்ததாக ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி சமி அபு சுரி, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இஸ்‌ரேலின் தாக்குதல் தொடர்வதாலும் ஹமாஸ் விதித்த நிபந்தனைகள் ஏற்கப்படாததாலும் பிணைக்கைதிகளை திருப்பி ஒப்படைப்பதற்கான சாத்தியம் இல்லை என்று அவர் கூறினார்.

ஹமாஸ் அமைப்பின் நிபந்தனைகளை ஏற்றால், இதுவரை போரிட்டு மாண்ட இஸ்‌ரேலிய வீரர்களின் மரணத்துக்கு அர்த்தமில்லாமல் போய்விடும் என்று திரு நெட்டன்யாகு தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதியன்று இஸ்‌ரேலிய மக்கள் மீது ஹமாஸ் தொடுத்த தாக்குதல் போன்று இன்னொரு தாக்குதல் ஏன் நடக்காது என்ற கேள்வியும் உள்ளது என்றார் அவர்.

ஹமாஸ் அமைப்பை வேருடன் அழித்து பிணைக்கைதிகள் அனைவரையும் திரும்பவும் சொந்த நாட்டுக்குத் திருப்பிக் கொண்டு வருவதுதான் இலக்கு என்று திரு நெட்டன்யாகு கூறினார்.

இதற்கிடையே, பிணைக்கைதிகளை விடுவிக்க தேவையானவற்றை திரு நெட்டன்யாகு உடனடியாகச் செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பங்களிடமிருந்து அவருக்கு அளிக்கப்படும் நெருக்குதல் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்

தொடர்புடைய செய்திகள்