தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நியூ ஹேம்ஷியரில் டிரம்ப் வெற்றி

2 mins read
43b6c1f5-33f9-4185-bc3b-a9a4227f625d
டோனல்ட் டிரம்ப், நிக்கி ஹேலி (வலது) - படம்: ஏஎஃப்பி

மான்செஸ்டர், நியூ ஹேம்ஷியர்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைப் பிரதிநிதிக்கும் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க வாக்களிப்பு நடத்தப்படுகிறது.

இந்நிலையில், நியூ ஹேம்ஷியர் மாநிலத்தில் ஜனவரி 23ஆம் தேதியன்று வாக்களிப்பு நடைபெற்றது.

சிங்கப்பூர் நேரப்படி ஜனவரி 24ஆம் தேதி பிற்பகல் 3.00 மணி நிலவரப்படி 75 விழுக்காடு வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிற்கு 54.2 விழுக்காடு வாக்குகளும் முன்னாள் ஐக்கிய நாட்டுத் தூதர் நிக்கி ஹேலிக்கு 43.7 விழுக்காடு வாக்குகளும் கிடைத்தன.

இதையடுத்து, நியூ ஹேம்ஷியர் வாக்களிப்பில் டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அண்மையில் அயோவா மாநிலத்தில் வெற்றி பெற்ற டிரம்ப், நியூ ஹேம்ஷியர் மாநிலத்தையும் கைப்பற்றியிருப்பதால் குடியரசுக் கட்சி சார்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடும் சாத்தியம் வலுவடைந்துள்ளது.

குடியரசுக் கட்சி சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஜனநாயகக் கட்சி சார்பாகப் போட்டியிடும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் அவருக்கும் இடையே மீண்டும் கடுமையான போட்டி நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரம்ப் தொடர்ந்து வெற்றிகளைப் பதிவு செய்து வந்துள்ளபோதிலும், நிக்கி ஹேலி தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. தொடர்ந்து போராட இருப்பதாக அவர் சூளுரைத்தார். தம்முடன் விவாதம் செய்யும்படி அவர் டிரம்ப்பிற்குச் சவால் விடுத்தார்.

ஹேலியின் கருத்துகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தமது ஆதரவாளர்கள் முன் ஜனவரி 24ஆம் தேதியன்று டிரம்ப் பேசினார்.

நிக்கி ஹேலி எதார்த்த நிலையை உணரவில்லை என்றும் தோல்வி அடைந்தபோதிலும் வெற்றி பெற்றதுபோல அவர் பேசுவதாகவும் டிரம்ப் கூறினார்.

குறிப்புச் சொற்கள்