தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தைவானில் ஓராண்டு கட்டாய ராணுவ சேவை தொடக்கம்

1 mins read
8e19c33d-a3d5-4ebb-9bbd-c5217ce43605
ராணுவ ஆள்சேர்ப்பு நிலையத்தில் புதிய பயிற்சி வீரர்களின் முடி ஒட்ட வெட்டப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

தைப்பே: தைவானில் ஓராண்டு கட்டாய ராணுவ சேவை நடப்புக்கு வந்துள்ளது.

இதற்கு முன்னர் கட்டாய ராணுவ சேவை செய்வதற்கான காலகட்டம் நான்கு மாதங்களாக இருந்தது.

சீனாவால் தனது இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அக்கறை எழுந்துள்ள நிலையில், தைவான் அதன் கட்டாய ராணுவ சேவை காலகட்டத்தை நீட்டித்துள்ளது.

அதுகுறித்து 2022ஆம் ஆண்டில் அதிபர் சாய் இங் வென் அறிவித்தார்.

தைவானைத் தனது ஒரு பகுதியாகச் சீனா கருதுகிறது. ஆனால் தைவான் அதை ஏற்க மறுக்கிறது.

அண்மைக்காலமாக, தைவானுக்கு நெருக்குதல் தரும் வகையில் அதைச் சுற்றி பல ராணுவப் பயிற்சிகளைச் சீனா நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஜனவரி 25ஆம் தேதி காலை, நீட்டிக்கப்பட்ட கட்டாய ராணுவ சேவையில் சேரும் முதல் தொகுதி பயிற்சி வீரர்கள் ராணுவ ஆள்சேர்ப்பு நிலையத்தில் கூடினர்.

அந்த இளையர்கள் கொண்டு வந்த பைகளில் போதைப்பொருள் உள்ளதா என்பதைக் கண்டறிய மோப்ப நாய்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

புதிய பயிற்சி வீரர்களின் முடி ஒட்ட வெட்டப்பட்டது.

பிறகு, அவர்கள் ராணுவச் சீருடையை அணிந்துகொண்டனர்.

தைவானின் ராணுவ பலத்தை மேம்படுத்த தைவானியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பங்களிக்க வேண்டும் என்று தைவான் ராணுவம் கூறியது.

நீட்டிக்கப்பட்ட கட்டாய ராணுவ சேவையின்கீழ் முதல் தொகுதியில் மொத்தம் 670 பயிற்சி வீரர்கள் சேர்க்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுவதாக அது கூறியது.

குறிப்புச் சொற்கள்