ஹூதி தாக்குதல்களை ஒடுக்கும்படி ஈரானுக்கு சீனா வலியுறுத்து

2 mins read
574a674a-57bd-46d2-9216-b6b050bc1e81
செங்கடல் பகுதியில் ஹூதி கிளர்ச்சிப் படையினர் நடத்தும் தாக்குதல்களை ஒடுக்குமாறு ஈரானை சீனா கேட்டுக்கொண்டுள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

துபாய்: ஹூதி கிளர்ச்சிப் படையினர் செங்கடலில் கப்பல்கள் மீது நடத்தும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும்படி ஈரானிடம் சீனா தெரிவித்துள்ளது.

அதை செய்யத் தவறினால் சீனாவுடனான ஈரானிய வர்த்தக உறவுகள் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்று இது குறித்து விவரமறிந்த தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

செங்கடல் தாக்குதல்கள், சீனா, ஈரானுக்கு இடையிலான வர்த்தகம் தொடர்பாக இருநாடுகளுக்கு இடையே பெய்ஜிங்கில் பல சந்திப்புகள் அண்மையில் நடைபெற்றதாக தகவலறிந்த ஈரானிய வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், இந்தச் சந்திப்புகளில் யார் யார் பங்கேற்றனர், அவை எங்கு நடைபெற்றன என்பது போன்ற விவரங்களை அந்த வட்டாரங்கள் விளக்கவில்லை.

“அடிப்படையில் எங்கள் நலன்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட்டால், ஈரானுடனான வர்த்தகத்தை அது பாதிக்கும்,” என்று சீனா கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு பெயர் குறிப்பிட விரும்பாத ஈரானிய தூதர் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல்கள் காசாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்தத் தாக்குதல்கள் கப்பல் பயணம், காப்புறுதித் திட்டங்களின் செலவை ஏற்றி, ஆசியா, ஐரோப்பாவுக்கு இடையிலான முக்கிய வர்த்தகத் தடத்துக்கு இடையூறு ஏற்படுத்தி உள்ளது.

எனினும், சீனாவுடனான ஈரானிய உறவுகள் எவ்வாறு பாதிக்கப்படும் என்பது, இது குறித்து சீன அதிகாரிகள் குறிப்பிடும்படியான எந்தக் கருத்தும் கூறவில்லை, எந்த எச்சரிக்கையும் விடப்படவில்லை என்று ஈரானிய வட்டாரங்கள் விளக்குகின்றன.

கடந்த பத்து ஆண்டுகளில் சீனா, ஈரானின் மிகப் பெரிய வர்த்தக பங்காளி நாடாக விளங்கி வருகிறது என்பது நினைவுகூரத்தக்கது.

இதற்கிடையே, சூயஸ் கால்வாய் வழியான வர்த்தகப் போக்குவரத்து கடந்த இரண்டு மாதங்களில் 42 விழுக்காடு வீழ்ச்சி அடைந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்