பிரான்ஸ்: விரைவுச்சாலையில் தடுப்புகள் ஏற்படுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பிரான்ஸ்: விரைவுச்சாலையில் தடுப்புகள் ஏற்படுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

1 mins read
af545e62-bebc-4360-bf62-9d75549bccff
கிழக்கு பிரான்சில் உள்ள விரைவுச்சாலை ஒன்றில் விவசாயி ஒருவர் கழிவுகளைக் கொட்டுகிறார். பிரான்ஸ் நாட்டு விவசாயிகள் அரசாங்கத்துக்கு பல நூறு மில்லியன் யூரோ உடனடி நிதியுதவி கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் பதிலை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாக அவர்கள் கூறினர். - படம்: ஏஎஃப்பி

பாரிஸ்: பிரெஞ்சு விவசாயிகள் வடக்கு நகரான லில்லுக்குச் செல்லும் அந்நாட்டின் முக்கியமான விரைவுச்சாலை ஒன்றை மறித்து போராடி வருகின்றனர்.

இது தலைநகர் பாரிசில் பல கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனப் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது.

அரசுக்கு எதிராக நெருக்கடியை அதிகரிக்க உள்ளூர் விவசாய சங்கங்கள் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்த அறைகூவல் விடுத்துள்ளன. உணவுப் பொருள்களுக்கு குறைந்த விலை, தேவைக்கு அதிகமான ஒழுங்கு முறை விதிகள் ஆகியவற்றை எதிர்கொள்ள அரசாங்கம் தங்களுக்கு போதுமான உதவி வழங்கவில்லை என அந்தச் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.

பாரிசுக்கு வடக்கே உள்ள ஏ1 விரைவுச்சாலையில் வாகனப் போக்குவரத்து நெரிசல் 4 கிலோமீட்டர் தூரத்துக்கு பரவியுள்ளதாக பிரான்ஸ் நாட்டு போக்குவரத்து அமைச்சின் இணையத்தளம் கூறுகிறது.

மேலும் பாரிஸ் நகரின் தெற்குப் பகுதியிலும் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரத்தில் விவசாயிகள் சாலைத் தடுப்புகளை அமைத்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், பெரும்பாலான போராட்டங்கள் வெள்ளிக்கிழமை மதியம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகளின் கோபத்தை தணிக்க அவர்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வெள்ளிக்கிழமை மதியம் பிரெஞ்சு பிரதமர் கேப்பிரியல் அட்டால் விவசாயிகள் பிரச்சினை குறித்து உரை நிகழ்த்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.