மகாதீரின் இன்னொரு மகனிடமும் சொத்து விவரங்களைக் கேட்கிறது ஊழல் தடுப்பு ஆணையம்

மகாதீரின் இன்னொரு மகனிடமும் சொத்து விவரங்களைக் கேட்கிறது ஊழல் தடுப்பு ஆணையம்

1 mins read
e76aef85-042f-40f3-b797-7baf7a8bd1b9
முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மதுவின் மகன் மொக்ஸானி மகாதீர். - படம்: த ஸ்டார்

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு முகவையின் விசாரணையில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மதுவின் இன்னொரு மகன் உட்படுத்தப்பட்டு உள்ளார்.

வர்த்தகரான மொக்ஸானி மகாதீரின் சொத்துகளை அறிவிக்குமாறு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கடிதம் அனுப்பி இருப்பதாக ஆணையத்தின் பேச்சாளர் சனிக்கிழமை (ஜனவரி 27) தெரிவித்தார்.

முன்னதாக, இம்மாதத் தொடக்கத்தில் டாக்டர் மகாதீரின் மூத்த மகன் மிர்ஸான் மகாதீருக்கு ஆணையம் இதேபோன்ற ஒரு கடிதத்தை அனுப்பி இருந்தது.

1981ஆம் ஆண்டு டாக்டர் மகாதீர் முதன்முறை பிரதமராகப் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை திரு மொக்ஸானி ஈட்டிய வருமானத்தை விவரமாக அறிவிக்குமாறு அவரிடம் அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, இதுபோன்ற விசாரணை அரசியல் நோக்கம் கொண்டது என்று டாக்டர் மகாதீர் தெரிவித்து உள்ளார்.

உலக ஊடகக் கட்டமைப்பான அனைத்துலக புலன்விசாரணை பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு அண்மைய ஆண்டுகளாக வெளிப்படுத்தி வந்த வர்த்தக ஆவணங்களில் இடம்பெற்ற தகவல்களின் அடிப்படையில் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக டாக்டர் மகாதீரின் மகன்களுக்கு அது கடிதங்களை அனுப்பி சொத்து விவரங்களைக் கேட்டு வருகிறது.

அந்த வகையில், மலேசியாவின் முன்னாள் நிதி அமைச்சரும் மகாதீர் முகம்மதுவின் முன்னாள் ஆலோசகருமான டையிம் ஸைனுதீனும் விசாரிக்கப்பட்டு வருகிறார். சொத்து விவரங்களை அறிவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குவார் என்று மலேசிய ஊடகங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்