அமெரிக்கா: குளிர்பதனப் பெட்டிக்குள் மனித உடல்பாகங்களை மறைத்து வைத்த பெண்

அமெரிக்கா: குளிர்பதனப் பெட்டிக்குள் மனித உடல்பாகங்களை மறைத்து வைத்த பெண்

2 mins read
dcb398a8-60a2-4b68-ba11-21939f630d90
இந்த வீட்டில்தான் அச்சம்பவம் நிகழ்ந்தது. - படம்: இணையம்

நியூயார்க்: மனிதத் தலையும் உடற்பாகங்களும் அடங்கிய பைகளைத் தனது வீட்டுக் குளிர்பதனப் பெட்டியில் அடைத்து வைத்ததற்காக புரூக்ளினில் வசிக்கும் பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் ஜனவரி 26ஆம் தேதி தெரிவித்தனர்.

ஹெதர் ஸ்டைன்ஸ் எனும் அந்த 45 வயது பெண்ணின் வீட்டுக் குளிர்பதனப் பெட்டியில் உள்ள ஒரு கறுப்பு நிறப் பையில் மனிதத் தலை போன்ற ஒன்றைக் கண்டதாக ஒருவர் காவல்துறையிடம் தெரிவித்தார். அங்கு விரைந்த அதிகாரிகள் மனித உடற்பாகங்கள் அந்தக் குளிர்பதனப் பெட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர் என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.

புரூக்ளின், ஈஸ்ட் ஃபிளட்புஷ் எனும் பகுதியில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டிற்கு ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிக்கு காவல்துறை அதிகாரிகள் வந்தபோது, ஸ்டின்ஸ் தனியாக இருந்தார் என்றும் அந்தக் குளிர்பதனப் பெட்டி ஒட்டுவில்லையால் சுற்றப்பட்டிருந்தது என்றும் கூறிய காவல்துறையின் புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஜோசஃப் கென்னி, அந்தக் குளிர்பதனப் பெட்டியைத் திறக்க வேண்டாம் என்று அந்தப் பெண் மன்றாடினார் என்றும் ஜனவரி 23ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

மனித உடற்பாகங்கள் அந்தக் குளிர்பதனப் பெட்டிக்குள் சில மாதங்களாகவே இருப்பதாகவும் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒரு சண்டையில் தனது கணவரால் கொல்லப்பட்டவரின் உடற்பாகங்கள்தான் அவை என்றும் காவல்துறையிடம் தெரிவித்த அந்தப் பெண், அந்தக் கொலையை தான் பார்க்கவில்லை என்றும் கூறினார்.

கொல்லப்பட்டவரின் பெயர் கௌஷீன் கெல்ஸர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது என்றும் ஜனவரி 26ஆம் தேதி வரை மரணத்துக்கான காரணத்தை நியூயார்க் நகர மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் தெரிவிக்கவில்லை என்றும் காவல்துறையின் குறிப்பு கூறுகிறது.

மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு திருவாட்டி ஸ்டைன்ஸ், மனித உடலை மறைத்து வைத்திருந்ததற்காக ஜனவரி 22ஆம் தேதியன்று காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவரது கணவர் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்