கப்பலிலிருந்து ஏவுகணைகளை வடகொரியா பாய்ச்சியதாக தென்கொரியா தகவல்

2 mins read
5b964173-a20f-441a-8ff0-2bc176305a4d
வடகொரியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஏவுகணைச் சோதனைகள் தொடர்பான செய்தி தென்கொரியத் தலைநகர் சோலின் ரயில் நிலையம் ஒன்றின் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதனை தென்கொரிய மக்கள் பார்த்தனர். - படம்: ஏஎஃப்பி

சோல்: வடகொரியா தாழ்வாக பறந்து தாக்கக்கூடிய பல்வேறு ஏவுகணைகளை கப்பல்களில் இருந்து பாய்ச்சியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்து உள்ளது.

பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வடகொரியாவின் ஆக அண்மைய அணுவாயுத நடவடிக்கையாக இது எனக் கருதப்படுகிறது.

மஞ்சள் கடலிலும் தாழ்வாகப் பறந்து தாக்கக்கூடிய இதேபோன்ற ஏவுகணைகளை பியோங்யாங் அண்மையில் ஏவியது.

அத்தகைய ஏவுகணைகள் கப்பல் மூலம் ஏவப்படும் உத்திபூர்வ ஏவுகணைகளின் புதிய தலைமுறையைச் சேர்ந்தவை என்றும் முதல்முறையாக அவை சோதிக்கப்பட்டன என்றும் வடகொரியா கூறி இருந்தது.

புத்தாண்டு பிறந்தது முதல் புதுப் புது அணுவாயுதச் சோதனைகளில் வடகொரியா தீவிரம் காட்டி வருகிறது.

கடலுக்கடியில் இருந்து தாக்கக்கூடிய அணுவாற்றல் திறன்மிகுந்த ஏவுகணைகளையும் திட எரிபொருள் மூலம் இயங்கி கண்டம் விட்டு கண்டம் வேகமாக பாயக்கூடிய ஏவுகணைகளையும் தான் சோதித்ததாக வடகொரியா கூறியது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 28) பாய்ச்சப்பட்ட ஏவுகணைகள் குறித்து தென்கொரியாவின் கூட்டு ராணுவத் தளபதிகள் அமைப்பு அறிக்கை மூலம் விளக்கினர்.

“காலை 8 மணியளவில் (சிங்கப்பூர் நேரம் காலை 7 மணி) வடகொரியாவின் சின்போ வட்டாரத்திற்கு அருகில் உள்ள கடற்பகுதியில் இருந்து அடையாளம் காணப்படாத பல்வேறு ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதை எங்களது ராணுவம் கண்டுபிடித்தது,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதை வடகொரிய, அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் ஆராய்வதாகவும் வடகொரியாவின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை தான் கண்காணித்து வருவதாகவும் அது தெரிவித்தது.

கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள், கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய நவீன ஏவுகணைகளைக் காட்டிலும் குறைவான உயரத்தில் பறக்கக்கூடியவை.

வடகொரியா மீது ஐக்கிய நாடுகள் மன்றம் பொருளியல் தடை விதித்துள்ளபோதிலும் தாழ்வாகப் பறக்கக்கூடிய இதுபோன்ற ஏவுகணைகளைச் சோதித்துப் பார்க்க தடை எதுவும் விதிக்கப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்