கோலாலம்பூர்: தமது சொத்துகள் பற்றிய விவரங்களை வெளியிடத் தவறியதாக முன்னாள் மலேசிய நிதி அமைச்சர் டயிம் ஸைனுதீன் மீது ஜனவரி 29ஆம் தேதியன்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமக்குச் சொந்தமான 38 நிறுவனங்கள் பற்றி டயிம் அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை என்று அரசாங்க வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாது, தலைநகர் கோலாலம்பூருடன் சேர்த்து சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பாகாங், கெடா ஆகிய மாநிலங்களில் அவருக்கு இருந்த 25 நிலப்பகுதிகள் மற்றும் சொத்துகள் பற்றியும் ஏழு சொகுசு வாகனங்கள், இரண்டு முதலீட்டு நிதிக் கணக்குகள் பற்றியும் அவர் விவரங்களை வெளியிடத் தவறியதாகத் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு அறிவிக்கத் தவறுவது லஞ்ச, ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் குற்றமாகும்.
85 வயது டயிம், தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
1984ஆம் ஆண்டுக்கும் 2001ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மலேசியாவின் நிதி அமைச்சராக அவர் இருமுறை பதவி வகித்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 100,000 ரிங்கிட் (S$28,400) அபராதமும் விதிக்கப்படலாம்.
சொத்துகள் குறித்த விவரங்களை லஞ்ச, ஊழல் விசாரணை அதிகாரிகளிடம் வெளியிடத் தவறியதாக திரு டயிமின் மனைவி நயிமா அப்துல் காலித் மீது ஜனவரி 23ஆம் தேதியன்று குற்றம் சுமத்தப்பட்டது.
டயிம், முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதுவின் நெருங்கிய நண்பர்.
தொடர்புடைய செய்திகள்
மலேசியாவின் உயர்மட்ட நிலையில் ஊழலை களைய சூளுரைத்து, 2022ஆம் ஆண்டில் அந்நாட்டுப் பிரதமராகப் பொற்றுப்பேற்ற திரு அன்வார் இப்ராகிமுக்கு எதிராக டயிம் கடும் விமர்சனங்களை முன்வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தமக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக டயிம் குறைகூறியுள்ளார்.
இதே கருத்தையே டாக்டர் மகாதீரும் தெரிவித்துள்ளார்.
டயிமுக்கு எதிராகக் கிடைத்துள்ள ஆதாரங்களைக் கொண்டு அவருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
“அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என்மீது சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டு குறித்து அதிகம் பேச விரும்பவில்லை. நான் குற்றம் புரியவில்லை. வழக்கு விசாரணையை எதிர்கொள்ள காத்துக்கொண்டிருக்கிறேன்,” என்று குற்றம் சுமத்தப்பட்டதும் டயிம் அறிக்கை வெளியிட்டார்.
280,000 ரிங்கிட் பிணையில் டயிம் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தமது கட்சிக்காரரின் உடல்நலம் குன்றியிருப்பதால் அவரால் எங்கும் செல்ல முடியாது என்று டயிமின் வழக்கறிஞர் திரு எம். புரவலன் கூறியதை அடுத்து, டயிமுக்கு எதிராக நீதிபதி அஸுரா ஆல்வி கூடுதல் நிபந்தனைகளை விதிக்கவில்லை.
டயிம், ஜனவரி 29ஆம் தேதி காலை கோலாலம்பூர் நீதிமன்றத்துக்குச் சக்கரநாற்காலியில் சென்றார். அவருடன் அவரது மனைவியும் குடும்ப உறுப்பினர்களும் இருந்தனர்.
டயிமுக்கு முன்பு சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. அவரது செவித் திறன் குன்றியிருப்பதாகவும் அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பூஞ்சை தொற்று காரணமாக அவரது ஒரு கண் அகற்றப்பட்டதாக திரு புரவலன் கூறினார்.
டயிம் தொடர்பான வழக்கு விசாரணை மார்ச் 22ஆம் தேதி தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

