தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசிய மாமன்னர்: அரசியல் நிலைத்தன்மை மிகவும் முக்கியம்

3 mins read
ff98c5b0-c495-4fc8-93a4-99c193c9532e
மலேசிய மாமன்னர் அப்துல்லா அகமது ஷா. - படம்: இஸ்தானா நெகாரா மலேசியா

கோலாலம்பூர்: மலேசியாவின் மாமன்னராக 2019ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதியிலிருந்து பாகாங் சுல்தான் அப்துல்லா அகமது ஷா இருந்து வருகிறார்.

இவ்வாண்டு ஜனவரி 31ஆம் தேதியன்று அவருக்குப் பதிலாக ஜோகூர் மன்னர் இப்ராகிம் இஸ்கந்தர் புதிய மாமன்னராக முடிசூடப்படுவார்.

இந்நிலையில், ஜனவரி 3ஆம் தேதியன்று குறிப்பிட்ட சில ஊடகங்களுக்கு மாமன்னர் அப்துல்லா பேட்டி அளித்தார்.

மலேசியாவில் அரசியல் நிலைத்தன்மைக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

2018ஆம் ஆண்டில் நடைபெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக் கூட்டணி தோல்வி அடைந்தது. அதற்குப் பதிலாக முதல்முறையாக பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. டாக்டர் மகாதீர் முகம்மது இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பதவி ஏற்றார்.

ஆனால் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்குள் பூசல் ஏற்பட்டதை அடுத்து, 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று டாக்டர் மகாதீர், பிரதமர் பதவியிலிருந்து விலகினார்.

அதையடுத்து, பெர்சத்து கட்சிக்குத் தலைமைதாங்கும் முகைதீன் யாசினை மலேசியாவின் அடுத்த பிரதமராக மாமன்னர் அப்துல்லா நியமித்தார்.

2021ஆம் ஆண்டில் மலேசியாவில் மீண்டும் ஓர் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது.

பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற ஒருவரைப் பிரதமராக நியமிக்கும் கட்டாயம் மாமன்னர் அப்துல்லாவுக்கு மீண்டும் ஏற்பட்டது.

அப்போது அவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பைப் பிரதமராக நியமித்தார்.

திரு இஸ்மாயில் சப்ரி வெறும் 15 மாதங்களுக்கு மலேசியாவின் பிரதமராகப் பதவி வகித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவியதால் ஆட்சி கவிழ்ந்து மலேசியாவில் அரசியல் நிலையற்ற தன்மை நிலவியதாகவும் அப்பிரச்சினை தமது ஆட்சிக்காலத்தில் தமக்கு மிகக் கடுமையான சவால்களை ஏற்படுத்தியதாகவும் மாமன்னர் அப்துல்லா தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மலேசியப் பொதுத் தேர்தலில் எந்த ஒரு கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதனால் மீண்டும் அரசியல் நெருக்கடி ஏற்படும் அபாயம் இருந்தபோது அன்வார் இப்ராகிமை மாமன்னர் அப்துல்லா பிரதமராக நியமித்தார்.

மலேசியாவை சிறந்த முறையில் ஆட்சி செய்ய அன்வார் இப்ராகிமுக்கு வாய்ப்பும் போதுமான கால அவகாசமும் வழங்குமாறு மலேசியர்களை மாமன்னர் அப்துல்லா கேட்டுக்கொண்டார்.

“நாட்டில் அரசியல் நிலைத்தன்மையை சீராக வைத்திருக்க என்னால் முடிந்ததை செய்துள்ளேன் என்று நம்புகிறேன். முழுமையான தீர்வு இன்னும் காணப்படவில்லை என்றபோதிலும் தற்போதைக்கு நல்லிணக்கம், நிலைத்தன்மையுடன் இருக்க தேவையானவற்றைச் செய்துள்ளேன்,” என்று 64 வயது மாமன்னர் அப்துல்லா கூறினார்.

திரு அன்வாரின் ஆட்சியைக் கவிழ்க்க சதித்தீட்டம் தீட்டப்படுவதாக வெளியாகியுள்ள செய்திகள் பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அது எந்த அளவுக்கு உண்மை என்று தமக்குத் தெரியாது என மாமன்னர் அப்துல்லா பதிலளித்தார்.

“நாட்டை ஆட்சி செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து விவகாரங்களையும் அரசியலாக்கக்கூடாது. நாட்டை மேம்படுத்துவதிலும் மக்களை ஒன்றிணைப்பதிலும் அரசாங்கம் தீவிரமாகச் செயல்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

குறுகிய மனப்பான்மையுடன் நடந்துகொள்ள வேண்டாம் என்று மலேசிய அரசியல்வாதிகளை அவர் கேட்டுக்கொண்டார்.

மலேசியாவுக்கு நிலையான அரசாங்கம் இருந்தால் மட்டுமே முதலீட்டாளர்களை ஈர்க்க முடியும் என்றார் அவர்.

எனவே, அரசியல் நிலைத்தன்மை மிகவும் முக்கியம் என்று மாமன்னர் அப்துல்லா வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்