தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிட்னி துறைமுகத்தில் பெண்ணைத்தாக்கிய சுறா

1 mins read
d398278c-62c9-4ce7-8918-49f83f044557
பாதிக்கப்பட்ட பெண்ணின் வலது காலில் மிகக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. - படம்: ஏஎஃப்பி

சிட்னி: சிட்னி துறைமுகத்துக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் நீந்திக்கொண்டிருந்த பெண் ஒருவர் சுறாவால் தாக்கப்பட்டார். இதில் அப்பெண்ணின் வலது காலில் மிகக் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாக ஆஸ்திரேலிய ஊடகம் தெரிவித்தது.

ஜனவரி 29ஆம் தேதியன்று சிட்னி நகரின் முக்கிய சின்னமான சிட்னி ஓப்பரா ஹவுசுக்கு அருகில் உள்ள எலிசபெத் விரிகுடாவில் 29 வயது திருவாட்டி லோரன் ஓ’ நீல் நீந்திக்கொண்டிருந்தபோது அவரைச் சுறா தாக்கியதாக ஆஸ்திரேலியக் காவல்துறை கூறியது.

சுறாவிடமிருந்து தப்பிக்கப் போராடிக்கொண்டிருந்த திருவாட்டி ஓ’ நீலைக் காப்பாற்ற அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் விரைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

திருவாட்டி ஓ’ நீலின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் செயின்ட் வின்சென்ட் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்று மருத்துவமனை கூறியது.

2009ஆம் ஆண்டுக்குப் பிறகு சிட்னி, துறைமுகத்தில் சுறாவால் ஒருவர் தாக்கப்பட்டிருப்பது இது முதல் முறை.

2009ஆம் ஆண்டில் சிட்னி துறைமுகத்துக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் ஆஸ்திரேலியக் கடற்படை அதிகாரி ஒருவர் நீந்திக்கொண்டிருந்தபோது சுறா ஒன்று அவரைத் தாக்கியது.

அந்தச் சுறாவுடன் சண்டையிட்டு அந்த ஆடவர் தப்பினார். அவரது கரத்திலும் காலிலும் காயங்கள் ஏற்பட்டன.

2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிட்னி கடற்பகுதியில் பிரிட்டிஷ் முக்குளிப்புப் பயிற்றுவிப்பாளரான 35 வயது சைமன் நீலிஸ் சுறாவால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

1963ஆம் ஆண்டுக்குப் பிறகு சிட்னி கடற்பகுதியில் சுறாவால் தாக்கப்பட்டு ஒருவர் மாண்டது அதுவே முதல் முறை.

குறிப்புச் சொற்கள்