வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்கும் புதிய கல்லூரிகளின் விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்திவைப்பு

வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்கும் புதிய கல்லூரிகளின் விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்திவைப்பு

2 mins read
d695d4dc-56bc-47d7-a4e0-c8b3f4923e86
கனடாவின் டொரோண்டோ நகரில் உள்ள டொரோண்டோ பல்கலைக்கழகம். - படம்: ராய்ட்டர்ஸ்

பிரிட்டிஷ் கொலம்பியா: அனைத்துலக மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள விழையும் புதிய கல்லூரிகளின் விண்ணப்பங்கள், 2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று பிரிட்டிஷ் கொலம்பியா மாநில அரசாங்கம் திங்கட்கிழமை (ஜனவரி 29) தெரிவித்தது.

தனியார் பயிற்சிக் கழகங்களில் சேர விரும்புவோருக்கு குறைந்தபட்ச மொழித் தேவைகள் இருப்பதை உறுதி செய்வதற்காகவும் தொழிலாளர் சந்தை தேவைகள் மற்றும் பட்டக்கல்வி  சான்றிதழுக்கான உயர் தரங்களை அமைப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று பிரிட்டிஷ் கொலம்பியா கூறியது.

கனடிய பல்கலைக்கழகங்களில் பயில பெரிய அளவிலான அனைத்துலக மாணவர்கள் வருவதால், அந்நாட்டில் வாடகை வீடுகளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் வாடகை வீடுகளுக்கான கட்டணம் 2022 டிசம்பருடன் ஒப்புநோக்க கடந்த ஆண்டு டிசம்பரில் 7.7% அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, புதிய அனைத்துலக மாணவர்களுக்கான அனுமதியை இரண்டு ஆண்டு நிறுத்தி வைப்பதாக கனடிய மத்திய அரசாங்கம் கடந்த வாரம் அறிவித்தது. இதன் மூலம் அந்நாட்டுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 35 விழுக்காடு அதாவது 360,000க்குக் குறையும்.

மேலும் அந்நாடு, வெளிநாட்டு மாணவர்களின் பட்டக்கல்விக்குப் பிறகு கொடுக்கப்பட்டு வந்த வேலை அனுமதிச் சீட்டையும் நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.

கடந்த ஆண்டு இறுதியின் புள்ளிவிவரப்படி, கனடாவில் ஒரு மில்லியன் அனைத்துலக மாணவர்கள் கல்வி அனுமதிச் சீட்டு வைத்திருக்கிறார்கள் என்றும் அது பத்தாண்டுகளுக்கு முன் இருந்ததைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம் என்றும் அரசாங்கத் தரவுகள் தெரிவிக்கின்றன.

பட்டக்கல்வி முடித்ததும் அங்கேயே வேலையில் சேர்வது எளிதாக இருப்பதால், அனைத்துலக மாணவர்கள் விரும்பும் பிரபலமான நாடாக கனடா விளங்குகிறது என்று ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்