தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மலேசியாவின் 16வது மாமன்னருக்குக் கோலாகலப் பிரியாவிடை

2 mins read
9352b7c5-551e-4cb5-9c8e-6a1eade20e79
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள நாடாளுமன்ற சதுக்கத்திலிருந்து மாமன்னர் அப்துல்லா அகமது ஷாவும் அரசியார் அசிஸா அமினா மைமுனா இஸ்கந்தரியாவும் காரில் புறப்பட்டுச் சென்றனர். வழி நெடுகிலும் மலேசியர்கள் பலர் தங்கள் நாட்டுக் கொடியை அசைத்து ஆரவாரம் செய்தனர். - படம்: மலாய் மெய்ல் நாளிதழ்

கோலாலமபூர்: மலேசிய மாமன்னர் அப்துல்லா அகமது ஷாவுக்கும் அரசியார் அசிஸா அமினா மைமுனா இஸ்கந்தரியாவுக்கும் ஜனவரி 30ஆம் தேதி காலை தலைநகர் கோலாலம்பூரில் உள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் பிரியாவிடை விழா நடத்தப்பட்டது.

மாமன்னர் அப்துல்லா அகமது ஷாவின் ஆட்சிக்காலம் ஜனவரி 30ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

ஜனவரி 31ஆம் தேதியன்று ஜோகூர் மன்னர் இப்ராகிம் இஸ்கந்தர் மாமன்னராக முடிசூட்டப்படுகிறார்.

முன்னதாக இசைக் கருவிகள் முழங்க, மாமன்னர் அப்துல்லா அகமது ஷாவும் அவரது துணைவியாரும் நாடாளுமன்ற சதுக்கத்தை அடைந்தனர்.

அங்கு அவர்களை மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமும் அவரது மனைவி டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயிலும் வரவேற்றனர்.

அவர்களுடன் துணைப் பிரதமர்களான டாக்டர் அகமது ஸாஹிட் ஹமிடி, திரு ஃபடில்லா யூசோஃப் ஆகியோரும் அவர்களது மனைவிமார்களும் இருந்தனர்.

பிரியாவிடை விழாவில் மாமன்னர் அப்துல்லா அகமது ஷாவும் அவரது துணைவியாரும் கௌரவிக்கப்பட்டனர்.

அவர்கள் இருவருக்கும் அரச மரியாதை செலுத்தப்பட்டதுடன் 21 பீரங்கிக் குண்டுகள் முழங்கின.

விழா நிறைவுபெற்றதை அடுத்து, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துறை தலைவர்கள், வெளிநாட்டு தூதர்கள் ஆகியோரிடமிருந்து மாமன்னர் அப்துல்லா அகமது ஷாவும் அவரது மனைவியும் விடைபெற்றுக்கொண்டு காரில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

அங்கிருந்து அவர்கள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள புங்கா ராயா வளாகத்துக்குச் சென்றனர்.

வழிநெடுகிலும் மலேசியர்கள் பலர் மலேசியக் கொடியை அசைத்து, ஆரவாரம் செய்தனர். அரசாங்க ஊழியர்கள், தனியார் துறை ஊழியர்கள் என 3,000க்கும் மேற்பட்டோர் மாமன்னருக்கும் அவரது துணைவியாருக்கும் பிரியாவிடை அளித்தனர்.

குறிப்புச் சொற்கள்