பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்குப் பத்தாண்டுகள் சிறை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்குப் பத்தாண்டுகள் சிறை

1 mins read
ef8a8f62-77d0-439f-a4d3-60a354972ff9
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். - படம்: ராய்ட்டர்ஸ்

இஸ்லாமாபாத்: அரசாங்க ரகசியத்தைக் கசியவிட்டதற்காக, முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு பாகிஸ்தானிய நீதிமன்றம் பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

ஜனவரி 30ஆம் தேதி அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

வாஷிங்டனிலிருந்து அமெரிக்காவுக்கான பாகிஸ்தானியத் தூதர் இஸ்லாமாபாத் அரசாங்கத்திற்கு அனுப்பிய ரகசியத் தகவலை திரு கான் வெளியிட்டதாகக் கூறப்பட்டது.

இதன் தொடர்பில், முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷிக்கும் சிறப்பு நீதிமன்றம் பத்தாண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததாக திரு கானின் தெஹ்ரீக் இ இன்சாஃப் (பிடிஐ) கட்சி தெரிவித்தது.

இவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாக அக்கட்சி கூறியது.

இது திரு கானுக்கான மக்களின் ஆதரவை வலுவிழக்கச் செய்யும் தீர்ப்பு என்கிறது அவரது தரப்பு.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் அரசாங்கத்திற்குச் சொந்தமான அன்பளிப்புப் பொருள்களைச் சட்டவிரோதமாக விற்றதற்காக அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ரகசியத் தகவல் கசிவு தொடர்பில் திரு கானின் வழக்கறிஞர் குழு அவருக்காக வாதாடவோ சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்யவோ அனுமதிக்கப்படவில்லை என்றும் இந்த வழக்கு விசாரணை சிறைச்சாலை வளாகத்திற்குள்ளேயே நடத்தப்பட்டது என்றும் ராய்ட்டர்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் திரு இம்ரான் கான் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு அவர் பல்வேறு வழக்குகளை எதிர்கொள்கிறார்.

குறிப்புச் சொற்கள்