நஜிப் வழக்கு தொடர்பாக மலேசியாவின் அரச மன்னிப்பு வாரியம் கலந்துரையாடல்

நஜிப் வழக்கு தொடர்பாக மலேசியாவின் அரச மன்னிப்பு வாரியம் கலந்துரையாடல்

2 mins read
d03b86b0-c6e0-4810-833c-b22f0fa4db57
முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக். - படம்: ராய்ட்டர்ஸ்

கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் தொடர்பான வழக்கு பற்றிக் கலந்துரையாட ஜனவரி 29ஆம் தேதியன்று அந்நாட்டு மாமன்னர் தலைமையின்கீழ் மலேசிய அரச மன்னிப்பு வாரியம் கூடியதாக மலேசியப் பிரதமர் அலுவலக அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தஃபா தெரிவித்தார்.

ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு நஜிப்புக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள காஜாங் சிறையில் நஜிப் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அரச மன்னிப்பு கேட்டு அவர் விண்ணப்பம் செய்துள்ளார்.

அரச மன்னிப்பு வாரியத்தில் டாக்டர் ஸலிஹா முஸ்தஃபாவும் அங்கம் வகிக்கிறார். நஜிப் தொடர்பான கலந்துரையாடல் தேசிய அரண்மனையில் நடைபெற்றதாக ஜனவரி 30ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

நஜிப்புக்கு அரச மன்னிப்பு வழங்கப்படுவது குறித்து கலந்துரையாடப்பட்டதா என்பது குறித்து அவர் தகவல் தெரிவிக்கவில்லை. அரச மன்னிப்பு வாரியத்தின் அறிக்கைக்குக் காத்திருக்குமாறு அவர் செய்தியாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

மாமன்னர் என்கிற முறையில் இதுவே பாகாங் மன்னர் அப்துல்லா அகமது ஷா தலைமையில் நடத்தப்பட்ட இறுதி அதிகாரபூர்வ கூட்டம் என்று தெரிவிக்கப்பட்டது.

ஜனவரி 31ஆம் தேதியன்று ஜோகூர் மன்னர் இப்ராகிம் இஸ்கந்தர் மலேசிய மாமன்னராக அரியணை ஏறுகிறார்.

நஜிப்பின் விண்ணப்பம் தொடர்பாக மலேசிய அரச மன்னிப்பு வாரியம் எடுக்கும் முடிவு எப்போது அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படவில்லை.

நஜிப்பின் மேல்முறையீடு முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில் அரச மன்னிப்பு கிடைத்தால் மட்டுமே அவரால் சிறையிலிருந்து விடுதலை பெற முடியும்.

இதற்கிடையே, நஜிப்பின் அரச மன்னிப்பு விண்ணப்பம் தொடர்பாக அரச மன்னிப்பு வாரியம் வெளியிடும் செய்திகளை மட்டுமே நம்ப வேண்டும் என்று மலேசிய தொடர்புத்துறை அமைச்சர் ஃபாமி ஃபட்சில் வலியுறுத்தியுள்ளார்.

நஜிப்புக்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டுவிட்டதாக அம்னோ கட்சிக்கு சொந்தமான உத்துசான் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. பிறகு அதுகுறித்து அது மன்னிப்பு கேட்டுக்கொண்டது.

பின்னர் செவ்வாய்க்கிழமை பிற்பகலில், மலேசிய உள்துறை அமைச்சர் சைஃபுதின் நசுஷன் இஸ்மாயில் சிறப்பு செய்தியாளர் கூட்டத்தை நடத்தவிருக்கிறார் என்று அந்த அமைச்சு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதற்கு பிறகு அரச மன்னிப்பு பற்றிய மேலும் சில ஊகச் செய்திகள் வெளிக் கிளம்பின.

இதன் விளைவாக உள்துறை அமைச்சு அந்த அறிக்கையை மீட்டுக்கொண்டது. செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் வெளிநாட்டு ஊழியர் சேர்க்கை பற்றி பேசுவார் என்று அது விளக்கம் அளித்தது.

இதற்கிடையே, அரச மன்னிப்பு வாரியம் விரைவில் கூடி, திரு நஜிப்பின் அரச மன்னிப்பு குறித்து கலந்தாலோசிக்கும் என்று ஊகங்களைப் பரப்புவது அரச மன்னிப்பு வாரியத்தை அவமதிப்பது போலாகி விடும் என்று திரு நஜிப்பின் தலைமை வழக்கறிஞர் முகம்மது ஷஃபி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

அரச மன்னிப்பு வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த மனு தொடர்பில் அந்த வாரியம் கலந்து ஆலோசிக்கவிருக்கும் விவகாரம் குறித்து திரு நஜிப்புக்கோ அவரது வழக்கறிஞர் குழுவுக்கோ தெரியாது என்றும் திரு முகம்மது ஷஃபி கூறினார்.

குறிப்புச் சொற்கள்