தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிரியா, ஈராக்கில் உள்ள ஈரானிய இலக்குகளைத் தாக்கத் திட்டமிடும் அமெரிக்கா

2 mins read
c5a5bec1-50e7-4a58-b29b-067850abca30
ஈரானிய ஆதரவோடு செயல்படும் போராளிகள் குழு கடந்த ஜனவரி மாத இறுதியில் ஜோர்தானில் அமைந்துள்ள அமெரிக்க முகாம் மீது தாக்குதல் நடத்தியது. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

வாஷிங்டன்: ஜோர்தானில் அமைந்துள்ள அமெரிக்க முகாம் மீது சென்ற மாத இறுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக ஈராக்கிலும் சிரியாவிலும் உள்ள ஈரானிய இலக்குகளைத் தாக்க அமெரிக்கா திட்டமிடுகிறது.

ஈரானிய அதிகாரிகளும் இடங்களும் தாக்குதல் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி சிபிஎஸ் நியூஸ், பிப்ரவரி 1ஆம் தேதி அந்தத் தகவலை வெளியிட்டது.

ஈரானிய ஆதரவுடன் செயல்படும் போராளிகள் குழு, சென்ற வாரயிறுதியில் ஆளில்லா வானூர்தி மூலம் ஜோர்தானில் உள்ள அமெரிக்க முகாமைத் தாக்கியதில் அமெரிக்கப் படையினர் மூவர் கொல்லப்பட்டனர்.

அந்தத் தாக்குதலில் மேலும் 40 பேர் காயமடைந்தனர். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி ஈரானில் தயாரிக்கப்பட்டது என மதிப்பிடப்பட்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் அமெரிக்க அதிகாரிகள் நால்வர் கூறினர்.

இவ்வேளையில், ஈரானின் புரட்சிகர ராணுவப் படை அதன் மூத்த அதிகாரிகளை சிரியாவிலிருந்து வெளியேற்றுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

ஜோர்தானியத் தாக்குதல், மத்திய கிழக்கில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் தரப்பினருக்கும் இடையே கடந்த அக்டோபரில் போர் தொடங்கியதன் பிறகு அமெரிக்கத் துருப்பினர் உயிரிழந்த முதல் சம்பவமாகும்.

அந்தத் தாக்குதலுக்கான அமெரிக்காவின் பதிலடி, வானிலை நிலவரத்தைப் பொறுத்து, பல நாள்கள் நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

அந்தத் தாக்குதலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று ஈரான் மறுத்துவருகிறது. ஆனால், அதில் பயன்படுத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி, உக்ரேனியப் படையெடுப்பில் ரஷ்யாவிற்கு உதவ ஈரான் அனுப்பிய ஆளில்லா வானூர்திகளைப்போல இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது.

ஈரானிய இலக்குகள் மீது எப்போது தாக்குதல் நடத்தப்படும் என்பது குறித்த மேல்விவரங்களை சிபிஎஸ் நியூஸ் வெளியிடவில்லை.

முன்னதாக, ஜோர்தானியத் தாக்குதலுக்குப் பதிலடி தர அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு குடியரசுக் கட்சியினர் கடும் நெருக்குதல் அளித்தனர்.

அதிபர் பைடனும் இதர தற்காப்பு அதிகாரிகளும் பதிலடி தரப்படும் என்று உறுதியளித்த அதேவேளையில் ஈரானுடன் பெரிய அளவிலான போரை அமெரிக்கா விரும்பவில்லை என்று கூறினர்.

இவ்வேளையில், ஈரானிய மண்ணில் தாக்குதல் நடத்தப்படாமல், சிரியாவிலும் ஈராக்கிலும் உள்ள ஈரானிய இலக்குகள் தாக்கப்படும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27,000ஐ எட்டியிருக்கிறது. ஆயிரக்கணக்கான உடல்கள் இடிபாடுகளில் புதைந்துகிடப்பதாகவும் கூறப்படுகிறது.
காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27,000ஐ எட்டியிருக்கிறது. ஆயிரக்கணக்கான உடல்கள் இடிபாடுகளில் புதைந்துகிடப்பதாகவும் கூறப்படுகிறது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
குறிப்புச் சொற்கள்