மலேசிய தடுப்புக் காவல் நிலையத்திலிருந்து100க்கும் மேற்பட்ட மியன்மார் அகதிகள் தப்பியோட்டம்

மலேசிய தடுப்புக் காவல் நிலையத்திலிருந்து100க்கும் மேற்பட்ட மியன்மார் அகதிகள் தப்பியோட்டம்

1 mins read
8bf47866-b28a-41db-b5a9-569fdb066b13
பேராக்கில் உள்ள பிடோர் தடுப்புக் காவல் நிலையத்திலிருந்து அகதிகள் தப்பிச் சென்றுள்ளனர். - படம்: இபிஏ

கோலாலம்பூர்: மலேசியாவின் குடிநுழைவு தடுப்புக் காவல் நிலையத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மியன்மார் குடியேறிகள் வியாழக்கிழமையன்று தப்பி ஓடிவிட்டனர்.

அவர்களில் ஒருவர் தப்பிச் செல்லும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார் என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

மலேசிய தடுப்புக் காவல் நிலையத்திலிருந்து தப்பிச் செல்வது இது இரண்டாவது முறை.

2022 ஏப்ரலில் மியன்மாரிலிருந்து வந்த 582 ரோஹிங்யா அகதிகள் கெடா மாநிலத்தில் உள்ள குடிநுழைவு முகாமிலிருந்து தப்பிச் சென்றனர்.

இவர்களில் ஆறு பேர் நெடுஞ்சாலையில் வாகனங்கள் மோதி உயிரிழந்தனர்.

சென்ற வியாழக்கிழமை இரவு பேராக் மாநிலத்தில் உள்ள பிடோர் குடிநுழைவு தடுப்புக் காவல் முகாமிலிருந்து மொத்தம் 131 குடியேறிகள் தப்பிச் சென்றனர் என்று குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் ரஸ்லின் ஜுசோ வெள்ளிக்கிழமை அன்று ஓர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தார்.

ஆண்களுக்கான முகாமிலிருந்து தப்பிச் சென்றவர்களில் 115 ரோஹிங்யா அகதிகளும் 16 மியன்மார் நாட்டவர்களும் அடங்குவர் என்று பேராக் மாநில அறிக்கையை சுட்டிக்காட்டி பெர்னாமா தெரிவித்தது.

அகதிகளுக்கான தகுதியை அங்கீகரிக்காத மலேசியா, மியன்மார் அல்லது பங்ளாதேஷ் முகாம்களில் துன்புறுத்தலுக்கு ஆளாகி தப்பியோடிய அகதிகளுக்கு புகலிடமாக இருந்து வருகிறது.

ஆனால் அண்மைய ஆண்டுகளில் ரோஹிங்யா அகதிகள் ஏற்றப்பட்ட படகுகளை அது திருப்பியனுப்பிவிட்டது.

மேலும் ஆவணமில்லாத ஆயிரக்கணக்கான குடியேறிகளை சுற்றி வளைத்து தடுப்புக் காவலில் மலேசியா அடைத்துவருகிறது.

குறிப்புச் சொற்கள்