தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நஜிப் ரசாக்கின் சிறைத்தண்டனை பாதியாகக் குறைப்பு: அரச மன்னிப்பு வாரியம்

2 mins read
73e764c8-c23d-48b6-bbc0-2c556bd67054
மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக். - படம்: பெர்னாமா

கோலாலம்பூர்: மலேசியாவின் அரச மன்னிப்பு வாரியம், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் தண்டனைக் காலத்தையும் அபராதத் தொகையையும் குறைத்துள்ளது.

வாரியத்தின் செயலகம் பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ஜனவரி 29ஆம் தேதி 61வது கூட்டத்தை நடத்தியதாகவும் அதில் திரு நஜிப்பின் மேல்முறையீடு உட்பட ஐந்து மன்னிப்பு முறையீடுகள் குறித்துக் கலந்துரையாடியதாகவும் தெரிவித்தது.

அந்தக் கூட்டத்திற்கு அப்போதைய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதின் அல்-முஸ்தஃபா பில்லா ஷா தலைமை தாங்கினார்.

அனைவரது கருத்துகளையும் ஆலோசனைகளையும் கேட்டபின், திரு நஜிப்பிற்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையையும் அபராதத்தையும் குறைக்க முடிவெடுத்ததாக அரச மன்னிப்பு வாரியம் கூறியது.

முன்னதாக அவருக்கு வழங்கப்பட்ட 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. அதன்கீழ் திரு நஜிப், 2028ஆம் ஆண்டு ஆகஸ்டு 23ஆம் தேதி சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார்.

முன்னர் அவருக்கு விதிக்கப்பட்ட 210 மில்லியன் ரிங்கிட் (S$59 மில்லியனுக்குமேல்) அபராதத்தை வாரியம் 50 மில்லியன் ரிங்கிட்டாகக் (S$14 மில்லியனுக்குமேல்) குறைத்துள்ளது.

திரு நஜிப் அந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால், மேலும் ஓராண்டு அவரது சிறைத்தண்டனை நீட்டிக்கப்பட்டு அவர் 2029ஆம் ஆண்டு ஆகஸ்டு 23ஆம் தேதிதான் விடுவிக்கப்படுவார் என்று வாரியம் தெரிவித்தது.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை (ஜனவரி 30) திரு நஜிப்பிற்கு அரச மன்னிப்பு வழங்கப்படக்கூடும் என்ற வதந்திகள் பரவின.

இதன் தொடர்பில் அதிகாரபூர்வ அறிக்கைக்காகப் பொறுமையுடன் காத்திருக்கும்படி மலேசியாவின் பிரதமர் அலுவலக அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தஃபா, பிப்ரவரி 1ஆம் தேதி கேட்டுக்கொண்டார்.

எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவன வழக்கு தொடர்பில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது, நம்பிக்கை துரோகம் ஆகியவற்றுக்காக விதிக்கப்பட்ட தண்டனைகள் இவ்வாறு குறைக்கப்பட்டாலும், 70 வயதாகும் திரு நஜிப், 1எம்டிபி நிதி மோசடி தொடர்பில் லஞ்சம் வாங்கியதாகவும் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்ற முயன்றதாகவும் மேலும் 25 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

குறிப்புச் சொற்கள்