தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புகையிலை ஒழிப்புக் கூட்டத்தை ஏற்றுநடத்தும் பனாமா

2 mins read
4269d971-b267-44c2-9e86-7f0fef4f85ee
பிக் டொபேக்கோ நிறுவனம் இளையர்களை ஈர்க்கக் கடுமையாக முயல்வதாக உலகச் சுகாதார நிறுவனம் இம்மாதத் தொடக்கத்தில் எச்சரித்திருந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

பனாமா சிட்டி: மத்திய அமெரிக்க நாடான பனாமாவில், பிப்ரவரி 5ஆம் தேதி, உலக அளவிலான புகையிலை ஒழிப்புக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

புகையிலை பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் குழந்தைகள் உட்படக் கூடுதலானோரை ஈர்க்கும் முயற்சிகளில் இறங்கியுள்ள வேளையில், புகைபிடிப்பதால் விளையும் தீங்குகளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் அந்தக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

180க்கு மேற்பட்ட நாடுகளின் பேராளர்கள் பனாமா சிட்டியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்வர்.

புகையிலைப் பொருள்களுக்கான விளம்பரங்கள், நிதியாதரவு, மின்சிகரெட் போன்ற புதிய வகை புகையிலைப் பொருள்கள் ஆகிய அம்சங்களில் அந்தக் கூட்டம் கவனம் செலுத்தும் என்று கூறப்பட்டது.

உலகெங்கும் புகைபிடிப்போர் எண்ணிக்கை நிலையான விகிதத்தில் குறைந்தபோதும், பிக் டொபேக்கோ நிறுவனம் இளையர்களை ஈர்க்கக் கடுமையாக முயல்வதாக உலகச் சுகாதார நிறுவனம் இம்மாதத் தொடக்கத்தில் எச்சரித்திருந்தது.

புகையிலைப் பயன்பாடு, ஒவ்வோர் ஆண்டும் எட்டு மில்லியனுக்கும் மேற்பட்டோரைக் கொல்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களில் 1.3 மில்லியன் பேர் புகைபிடிக்காதவர்கள்; ஆனால் புகைபிடிப்போருக்கு அருகிலிருந்தவர்கள் என்று உலகச் சுகாதார நிறுவனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

தற்போது புகைபிடிப்போர் எண்ணிக்கை குறைந்துவந்தாலும் புகையிலை தொடர்பான மரணங்கள் குறைவதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும் என்று உலக நிறுவனம் கூறுகிறது.

“புகையிலை ஏற்படுத்தும் சேதம் பேரளவிலானது. ஆனால் அதன் மீது செலுத்தப்படும் கவனம் குறைவாக இருக்கிறது. ஏனெனில் அதன் தாக்கம் நீண்டகால அடிப்படையிலானது. அரசாங்கங்கள் அன்றாட விவகாரங்களில்தான் அதிகக் கவனம் செலுத்துகின்றன,” என்று சிலி நாட்டின் சுகாதார முன்னாள் துணையமைச்சர் ரிக்கார்டோ ஃபப்ரேகா ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

“மேலும், புகையிலைப் பொருள் உற்பத்தித் துறை வல்லுநர்கள் மிகச் சிறிய வயதினரைப் புகைபிடிக்கத் தூண்டக்கூடியவர்களாக இருக்கிறார்கள்,” என்றார் அவர்.

புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான கூட்டம் 2023 நவம்பரில் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் பனாமாவில் செப்புச் சுரங்கத்தை மூடக் கோரி பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதால் இக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்